சீனாவில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பாலர் பாடசாலையில் நபரொருவர் மேற்கொண்ட இரசாயன தாக்குதலில் ஐம்பத்தொரு சிறுவர்களும் மற்றும் மூன்று ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

யுனான் மாகாணத்தின் கெயுவான் நகரில் உள்ள பாலர் பாடசாலையில் நேற்று திங்கள்கிழமை , 23 வயதான சந்தேகநபர்  சிறுவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிறைந்த ஒரு வகுப்பறையில் அரிக்கும் அமில திரவத்தை தெளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் இருவர் அதிகமாக பாதிப்படைந்தனர், இருப்பினும் அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் சமூகத்தை பழிவாங்கும் செயலாகவே இரசாயனத்தை தெளித்ததாகக் கூறப்படுகிறது.

இராசயான தாக்குதலுக்கு பயன்படுத்திய காஸ்டிக் சோடா - சோடியம் ஹைட்ராக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது - சோப்பு, காகிதம் மற்றும் பல்வேறு சாயங்கள் உள்ளிட்ட பல பொதுவான தயாரிப்புகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, இராசயான தாக்குதலுக்கு பயன்படுத்திய காஸ்டிக் சோடா கண்களையும் தோலையும் எரிச்சலடையச் செய்யலாம் அல்லது எரிக்கலாம், ஒவ்வாமை எதிர்வினையைத் தூண்டும் அல்லது தற்காலிக முடி உதிர்தலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.