இன்றைக்கு திகதியில் பாடசாலைக்கு செல்லும் சிறார்களோ அல்லது பெண் பிள்ளைகளோ தங்களின் பற்களின் அமைப்பு நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். 

அதே தருணத்தில் அவர்களுடைய பற்களின் அமைப்பு விகாரமாக இருந்தால்.. அதனை சீரமைத்து தரும்படி பெற்றோர்களையும், பல்மருத்துவ நிபுணர்களையும் கேட்டுக் கொள்வதுண்டு. ஆனால் அவர்கள் பற்களில் மற்றவர்கள் தெரியும்படியான உலோகங்களை பொருத்திக்கொள்ள மாட்டேன் என்று நிபந்தனை விதிக்கிறார்கள். இந் நிலையில் இவர்களுக்கு உதவுவதற்காகவே தற்பொழுது Lingual  Orthodontics என்ற நவீன சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.

பற்களின் சீரமைப்பிற்காக தற்போது உலோகங்களுக்கு பதிலாக செராமிக் எனப்படும் திரவ நிலையிலான உலோக பசைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பொருத்தப்படுவதால், பற்களுக்கும் இவற்றிற்கும் வேறுபாடு தெரிவதில்லை. 

அதனால் கம்பி போன்ற உலோகத் தோற்றம் இதில் கிடைப்பதில்லை. தற்போது இதனை பற்களின் வெளிப் புறத்தில் பொருத்தாமல், பற்களின் உள்புறம் பொருத்தும் வகையில் சிகிச்சை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு  Lingual  Orthodontics என்று பெயரிடப்பட்டிருக்கிறது. 

இதன்போது பற்களில் பொருத்தப்படும் செராமிக் மற்றவர்களின் பார்வைக்கு தெரிவதில்லை. அதே தருணத்தில் சீரான பல் வரிசையை கொண்டிருப்பதால், பயனாளிகளுக்கும் அவர்கள் எதிர்பார்த்த பலன் தருகிறது. தற்போது இவ்வகையான சிகிச்சையும் பிரபலமாகி வருகிறது. ஆனால் இதனை சுத்தப்படுத்தி, பராமரிப்பதில் பல் மருத்துவர்களின் அறிவுரையை உறுதியாக ஏற்க வேண்டும்.

டொக்டர் கண்ணன்.

தொகுப்பு அனுஷா.