(எம்.ஆர்.எம்.வஸீம்)

இராணுவத்தில் இருக்கும் எவரும் தன்னிச்சையாக எந்த சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடப்போவதில்லை. யாராவது அவ்வாறு செயற்பட்டிருந்தால் அது யாருடையதாவது கட்டளைக்கமையவே செயற்பட்டிருப்பார்கள்.

அத்துடன் யாராவது ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதாக இருந்தால் அது விசாரணைக்குழு ஒன்றின் முன்னிலையில் மேற்கொள்ளப்படவேண்டுமென மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.

மாறாக ஊடகங்களுக்கு முன் அதனை வெளிப்படுத்துவது முறையல்ல எனவும் ஜனாதிபதி வேட்பாளர் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் கட்சி தேர்தல் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2008 காலப்பகுதியில் வெள்ளைவேனில் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் பொது மகன் ஒருவரினால் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த காலப்பகுதியில் நான் இராணுவத்தின் திட்டமிடல் அதிகாரியாகவே இருந்தேன். 

அதனால் இந்த சம்பவங்கள் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை. என்றாலும் இராணுவத்தினர் யாராவது சேவையில் இருக்கும் காலத்தில் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அது அவர்களின் கடமைக்கு அப்பால் சென்று மேற்கொண்ட சட்டவிரோத காரியமாகவே நான் பார்க்கின்றேன்.

அத்துடன் எந்த படைவீரரும் இராணுவத்தில் இருக்கும் சாரதியும் தான் நினைத்ததை ஒருபோதும் செய்யப்போவதில்லை. அவர்களுக்கு யாராவது அறிவுறுத்தி இருக்கவேண்டும். அல்லது கட்டளையிட்டிருக்கவேண்டும். அதுதொடர்பில் நாங்கள் தேடிப்பார்க்கவேண்டும். 

அதேபோன்று கடந்த காலங்களில் சட்டவிரோத சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதை யாராவது ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதாக இருந்தால் அதனை விசாரணை மேற்கொள்ளும் குழுவிடம் அல்லது நீதிமன்றத்தில் தெரிவித்தே இந்த பிரச்சினை தீர்க்கவேண்டும். 

மாறாக ஊடாகங்களுக்கு முன்வந்து இதனை வெளிப்படுத்துவது  நாகரிகமான செயல் அல்ல.  என்றாலும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் காலகட்டத்தில் இராணுவத்தில் திறமையான படைவீரர்கள் இருந்தனர். அவர்களை இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி இருக்கலாம்.

அத்துடன் 2008 காலப்பகுதியில் இராணுவத்தில் இருந்த எந்த படைவீரரும் இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்கு ஒரு அணியாக செயற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.

அவ்வாறு இடம்பெற்றிருந்தால், அது 2010க்கு பின்னரே இடம்பெற்றிருக்கவேண்டும். 2010 முதல் 2015வரை நான் இராணுவத்தில் இருந்து விலகி இருந்தேன் என்றார்.