யார் வெற்றியடையப் போகின்றார்? இப்போது பலரும் விடை கண்டறிய ஆர்வம் காட்டுகின்ற ஒரு கேள்வி இது.

என்னிடம் இந்த கேள்வியை எவராவது கேட்கும்போது நான் அளிக்கின்ற வழமையான பதில் அவர்களுக்கு ஏமாற்றத்தை தருகின்ற ஒன்றாகவே இருக்கிறது." யார் வெற்றிபெறப் போகான்றார் என்பதை கூறுவது கஷ்டமானது.ஆனால், தற்போதைய நிலைவரங்களின் போக்கில் நான் எவ்வாறு ஊகிக்கின்றேன் என்பது குறித்து சில விடயங்களை என்னால் கூறமுடியும் " என்பதே எனது பதிலாக இருக்கும்.அடுத்த சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலின் முடிவு தாங்கள் விரும்புகின்ற மாதிரி அமையவேண்டும் என்று உறுதிசெய்வதற்கு அவசரப்படுகின்றவர்களை  துல்லியம் இல்லாத எனது பதில் மகிழ்ச்சிப்படுத்தாது.

 தற்போது முன்னெடுக்கப்படுகின்ற தேர்தல் பிரசாரங்களின் இயக்கவிசை துரிதமாக மாறிவருகின்றமையே  தேர்தல் முடிவு எவ்வாறு அமையும் என்பது குறித்து எதிர்வு கூறுவதை பெருமளவுக்கு கஷ்டமானதாக்குகிறது. தேர்தல் காலங்களில் இலங்கையில் நம்பகமானதும்  துறைசார் நிபுணத்துவம் கொண்டதுமான கருத்துக்கணிப்புகள் செய்யப்படுவதில்லை என்பதும் தேர்தல் முடிவு குறித்து எதிர்வு கூறுவதை மேலும் கஷ்டமாக்குகிறது.அவ்வப்போது நம்மால் கேட்கக்கூடியதாக இருக்கும் ஆய்வு முடிவுகள் திட்டமிட்ட வகையிலான தேர்தல் பிரசாரங்களே தவிர, வேறு ஒன்றுமில்லை.

முப்பத்தைந்து வேட்பாளர்கள் களத்தில் இறங்கிய நிலையில் தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பித்தபோதிலும், எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று நான்கு பேர் மாத்திரமே  முன்னணி வேட்பாளர்களாக வெளிக்கிளம்பியிருக்கிறார்கள்.கோதாபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச,அநுரா குமார திசாநாயக்க மற்றும் மகேஷ் சேனநாயக்க ஆகியோரே அவர்களாவர்.இறுதிப்போட்டி இப்போது ராஜபக்சவுக்கும் பிரேமதாசவுக்கும் இடையிலானதாக குறுகிவிட்டது.

 எவ்வாறாயினும்,  தேர்தல் களத்தில் திசாநாயக்கவினதும் சே  னநாயக்கவினதும் பிரசன்னத்தின் வகிபாகத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடக்கூடாது.ஆதிக்க அரசியல் வர்க்கத்துக்கு மாற்றுக்களை தேடுகின்ற சுயாதீனமான வாக்காளர்கள் மத்தியில் இவர்கள் இருவரும் பெருமளவு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். தேர்தல் பிரசாரங்கள் உத்வேகம் அடைந்துவந்தபோது  திசாநாயக்கவினாலும்  சேனநாயக்கவினாலும்  தங்களது ஆதரவுத்தளங்களை விரிவுபடுத்தக்கூடியதாக இருந்தது.

இருவரும் தங்களுக்கிடையில் சுமார் 8 --10 சதவீத வாக்குகளை பகிர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்குமென்றாலும் கூட இரு முன்னணி போட்டியாளர்களில் எவரால் வெற்றி பெறுவதற்கு வசதியான புள்ளிவிபர அனுகூலத்தை பெறக்கூடியதாக இருக்கும் என்பதை தீர்மானிப்பதில் கணிசமான தாக்கத்தை அது செலுத்தும்.

2015 தேர்தலில் நல்லாட்சிக் கூட்டணிக்கு ஆதரவளித்து இப்போது அதிருப்தியடைந்திருக்கும்  சுயாதீன வாக்காளர்களிடமிருந்து கணிசமான ஆதரவை திசாநாயக்கவும் சேனநாயக்கவும் பெறுவார்கள் என்பது குறித்து பிரேமதாச முகாம் கவலைப்படுவதற்கு காரணங்கள் இருக்கின்றன.அதேபோன்று,  ராஜபக்சாக்களின் நகர்ப்புற மத்தியதர வர்க்க வாக்காளர் தளத்திற்குள் சேனநாயக்க ஊடுருவுவது குறித்து ராஜபக்ச முகாம் மிகவும் சஞ்சலமடைந்திருக்கிறது.

பிந்தி தொடங்கிய  பிரசாரத்தின் அனுகூலம்    

தேர்தல் பிரசாரத்தின் விசையாற்றலைப் பொறுத்தவரை, முக்கியமான ஒப்பீடு ராஜபக்சவுக்கும் பிரேமதாசவுக்கும் இடையிலானதாகவே இருக்கமுடியும்.

ராஜபக்ச தனது ஜனாதிபதி  பிரசாரத்தை ஒரு சில வருடங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டார். ஆனால், பிரேமதாச ஒரு சில மாதங்களுக்கு முன்னரே பிரசாரத்தை ஆரம்பித்தார்.பல வாரங்களாக நிலவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து உத்தியோகபூர்வமாக வேட்பாளர் நியமனத்தை பிரேமதாச பெற்றுக்கொண்டபோது ராஜபக்ச தனது பிரசாரத்தின் பெரும்பகுதியை ஏற்கெனவே  நிறைவுசெய்துவிட்டார்.பிரசாரங்களை பிந்தித்தொடங்கியவர் என்ற வகையில் பிரேமதாச பிரதிகூலமான ஒரு நிலையில் இருந்தே பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டியிருந்தது. ஜனாதிபதியாக வருவதற்கான போட்டியில் ராஜபக்ச பிரேமதாசவை விடவும் பெருமளவு தூரத்தை ஏற்னெவே ஒடிவிட்டார் என்பதும் பிரேமதாச ஒப்பீட்டளவில் ஒரு குறுகிய நேரத்தில் பெருமளவு தூரத்தை ஓடிக்கடக்கவேண்டியிருக்கிறது என்பதுமே அந்த நேரத்தில் அபிப்பிராயமாக இருந்தது.

 இந்த பிரதிகூலத்தை அனுகூலமான ஒரு நிலையாக பிரேமதாசவினால் மாற்றியமைக்கக்கூடியதாக இருந்தமையே இரு பிரதான போட்டியாளர்களுக்கும் இடையிலான பிரசார அரசியலில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக இருக்கிறது. தேர்தலுக்கு இன்னமும் ஒரு சில தினங்களே இருக்கும் நிலையில், ராஜபக்சவுக்கும் பிரேமதாசவுக்கும் இடையில் முன்னர் இருந்த வெளி பிரேமதாசவுக்கு அனுகூலமான முறையில் காணாமல் போய்விட்டது போலத் தோன்றுகிறது. ராஜபக்சவையும் முந்திச்சென்று பிரேமதாச  முன்னோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக சில அவதானிகள் கூறுகிறார்கள். இது எவ்வாறு  இறுதி முடிவு மீது தாக்கத்தைச் செலுத்தும் என்பது இன்னமும் தெளிவாகத்தெரியவில்லை.

முற்றிலும் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நோக்குகையில், பிரேமதாச வெற்றிகொள்வதற்கு இரு சவால்கள் இருக்கின்றன.முதலாவதாக, தனது பிரதான போட்டியாளரையும் விட  அவர்  முந்திச் சென்றிருக்கும் இடைவெளியை  தொடர்ந்து  பேணவேண்டியிருக்கிறது.பிறகு முதல் எணணிக்கையிலேயே 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவதை அவர் உறுதிசெய்யவேண்டியிருக்கிறது.

இவை மிகவும் கடினமான சவால்களாகும். ஏனென்றால், திசாநாயக்கவும் சேனநாயக்கவும் பெறவிருக்கி்ன்ற வாக்குகளில் பெரும்பாலானவை மற்றும்படி பிரேமதாசவுக்கே போகவேண்டியவையாகும். பதிலாக,2015 ஆம் ஆண்டில் முன்னெடுத்த ஜனநாயக மற்றும் ஆட்சிமுறைச் சீர்திருத்தச் செயற்திட்டத்தை தொடர்ந்து பேணுவதற்கு தவறிய தனது அரசியல் போட்டியாளர்களுக்கிடையிலான ஐக்கியமின்மையில் இருந்து  கோதாபய ராஜபக்ச பயனடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பிரசார ஒப்பீடு

கோதாபய ராஜபக்சவின் பிரசாரம் பெருமளவு நிதி செலவிடப்பட்டு  நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாக இருக்கின்ற போதிலும், அது மேலும் நகரமுடியாத அளவுக்கு உச்சக்கட்டத்தை இப்போது எட்டிவிட்டது என்பதை தேர்தல் பிரசாரங்களை உன்னிப்பாக அவதானிக்கின்ற எந்தவொரு அரசியல் மாணவனும் கவனித்திருக்கக்கூடும்.அதற்கு முக்கிய காரணம் ராஜபக்சவின் கொள்கைகள், வாக்குறுதிகள், மற்றும் சுலோகங்கள் கொஞ்சம் அலுத்துப்போனவையாக இருக்கின்றன.தனது பிரதான போட்டியாளரை விடவும் பல மாதங்கள் முன்கூட்டியே ராஜபக்ச பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார்.அவரது பிரசாரம் இனிமேலும் வாக்காளர்களை எழுச்சியூட்டக்கூடியவையாக இல்லை.கோதாபய ராஜபக்சவின் பிரசாரக்கூட்டங்களில்ஆதரவாளர்கள் அவரது பேச்சுக்களைக் கேட்டு அல்ல அவரது மூத்த சகோதரர் காலந்தாமதித்து கூட்டங்களுக்கு வருவதைக் காண்பதிலேயே ஊக்கம் பெறுகிறார்கள் என்பதை கோதாபயவுக்கு ஆதரவான தொலைக்காட்சி அலைவரிசைகளினால் கூட மறைக்கமுடியமல் இருக்கிறது.

மாறாக, பிரேமதாச போட்டியில் மிகவும் பிந்தி அதுவும் வெற்றிவாய்ப்பு குறைந்த ஒருவராக நோக்கப்பட்ட நிலையிலேயே இணைந்துகொண்டார். அதனால், தனது கொள்கைகளை, சுலோகங்களை மற்றும் வாக்குறுதிகளை  ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் யதார்த்தங்களுக்கு பொருத்தமான முறையில் புதிதாக மாற்றியமைக்கவேண்டியிருந்தது.இதை அவர் புதிதாக அமைக்கப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக ( மீண்டும் கொண்டுவரப்பட்ட ) அன்னம் சின்னத்தின் கீழான வேட்பாளராக நியமனம் பெறுவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கினார்.

தாமதித்து தொடங்கிய ஒரு  தேர்தல் பிரசாரத்தின் அங்கமாக கொள்கைகளும் சுலோகங்களும் வாக்குறுதிகளும் இவ்வாறு புதிதாக மாற்றியமைக்கப்பட்டமை சஜித் பிரேமதாசவுக்கு ஒரு மாயவித்தை போன்று பயனளித்திருக்கிறது போலத்தோன்றுகிறது.

கடந்த இரு வாரங்களின் போதும் தெளிவாகக்காணக்கூடியதாக இருந்ததைப்போன்று, ராஜபக்சவின் சுலோகங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் உருப்படியான ஒரு மாற்றாக வாக்காளர்களின் முன்னிலையில் சமர்ப்பிப்பதற்கு பிரேமதாச தொடராக பல புதிய சிந்தனைகளையும் சுலோகங்கயைும் வாக்குறுதிகளையும் வடிவமைத்திருக்கிறார்.பிரேமதாசவின் தேர்தல் பிரசாரங்கள் அவர் தன்னை புதிய சிந்தனைகளைக்கொண்ட ஒரு மனிதனாக மக்களுக்கு முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவையாக அமைந்திருக்கின்றன.

இதை எதிர்பார்க்காத ராஜபக்ச வாக்காளர்கள்  முன்வைப்பதற்கு புதிய சிந்தனை எதுவும் இல்லாதவராக தடுமாறுகிறார்.ராஜபக்சவின் பிரசாரங்கள் ஒரளவுக்கு பழையவையாகவும் மக்களுக்கு அதீதமாக பரிச்சயமானவையாகவும் உள்ள நான்கு சிந்தனைகளைச் சுற்றியவையாகவே அமைந்திருக்கின்றன ; தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்,ஒழுங்கு, கட்டுப்பாட்டுடனான சமூகமொன்றைக் கட்டியெழுப்புதல், பொருளாதார நவீனமயமாக்கத்தின் ஊடாக பொருளாதார சுபிட்சத்தைக் கொண்டுவருதல் மற்றும் பயனுறுதியுடைய ஆட்சிமுறையை நிறுவுதல் ஆகியவையே அந்த சிந்தனைகளாகும்.

புதிய சிந்தனைகள்

பிரேமதாச தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஒரு வாரத்துக்கு பிறகு , புதிய சிந்தனைகளை முன்வைப்பதன் மூலமாக தேர்தல் பிரசார விவாதத்தின் மையக்கூறை  மாற்றியமைக்கக்கூடிய ஒரு வழியில் ஊக்கத்தைக்கொடுத்து ஆதரவைப் பெருக்குவதற்கான வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதாக அவர் உணர்ந்துகொண்டார்.அவரின் இந்த "புதிய சிந்தனைகளில் "  நான்கு சிந்தனைகள் வாக்காளர்களின் மனங்களை வெவ்வேறு அளவுகளில் கவர்ந்திருக்கின்றன போலத் தெரிகிறது.

 முதலாவது, அவர் தன்னை வறிய மக்களின் ஜனாதிபதி வேட்பாளர் என்று திரும்பத்திரும்பக் கூறுவது. அவர் தனது நேரடியான பிரதான சமூக அறைகூவலை முக்கியமாக வறியவர்களை நோக்கி திருப்பத் தொடங்கினார்.அதன் மூலமாக கோதாபய ராஜபக்சவுக்கு சிநேகபூர்வமான நகர்ப்புற வர்த்தக சமூகத்திடமிருந்து மாத்திரமல்ல, ஐக்கிய தேசிய கட்சியின் பழைய உயர்மட்ட சமூகப்பிரிவினரிடமிருந்தும் தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறார்.அதேவேளை, வறிய இளம் பெண்களுக்கு சுகாதார உறைகளை இலவசமாக வழங்கப்போவதாக அவர் அளித்திருக்கும் வாக்குறுதி அவரை பெண்களின் ஜனாதிபதி வேட்பாளராகவும் முன்னிலைப்படுத்துகிறது.சஜித் பிரேமதாசவின் இந்த பால்நிலை உணர்திறன் கொண்ட இந்த நகர்வுக்கு வழமையாக ஆனணாதிக்க சிந்தனைகொண்டவர்களான ராஜபக்ச சகோதரர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

இரண்டாவதாக, தனது அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை விடவும் பெரியதான படிமத்தைக் கொண்டதாக  தனது சொந்த ஆளுமையை பிரேமதாச வெளிக்காட்டுகிறார்.அவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் உத்தியோகபூர்வ வேட்பாளர்.அதேவேளை,கடந்த ஐந்து வருட காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் கொள்கைகள் மீது தொடர்ந்தும் முழுமனதான பற்றுறுதி கொண்ட ஒரு வேட்பாளராக தன்னை அவர் வாக்காளர்களின் முன்பாக முன்னிலைப்படுத்தவில்லை.தனது தந்தையார் 1980 களின் பிற்பகுதியில் செய்ததைப்போன்று சஜித் பிரேமதாசவும் தனது முன்னுரிமைக்குரிய கொள்ககைளை முன்னெடுப்பதற்கான ஒரு வாகனமாக ஐக்கிய தேசிய கட்சியை புதிதாக மாற்றியமைக்கக்கூடியதாக அதன் கொள்கைகளை மாற்றியமைக்கப்போவதாக உறுதிகூறுகிறார்.ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்றால், கட்சி " புதிய பிரேமதாச கொள்கைகளை " அரவணைக்கவேண்டியிருக்கும் என்பதே அவர் விடுக்கும் செய்தியாக இருக்கிறது.

சொத்துக்களையும் செல்வத்தையும் சமமாகப் பகிர்ந்தளிக்கும் கோட்பாட்டுக்கு முக்கிய அழுத்தம் கொடுத்து பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளும்  வாக்குறுதிகளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நீண்டகாலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட  நவதாராளவாத கொள்கைகளில் இருந்து பிரதானமான விலகலாக அமைந்திருக்கின்றன. நகரப்புற மத்தியதர வர்க்க வாக்காளர்கள் மீது கவனம் செலுத்தியும் மத்தியதர வர்க்கத்தினரின் அக்கறைகளையும் கோரிக்கைகளையும் தேர்தல் மேடைகளில் முக்கியத்துவப்படுத்தியும் ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) செய்திருக்கும் நகர்வு பிரேமதாசவுக்கு  மேலும் அனுகூலத்தைத் தரக்கூடிய ஒரு அம்சமாகும். அது இந்த தேர்தலின்போது சமூக நலன்புரித்திட்டங்கள் தொடர்பான வாதத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வசதியான ஒரு சூழ்நிலையை பிரேமதாசவுக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.

 மூன்றாவது, அரசின் வழிநடத்தலுடனான சமூக நலன்புரிக் கொள்கைகளை தனது பொருளாதார மற்றும் சமூக மீள்நிர்மாணத் திட்டத்தின் மையக்கூறாக பிரேமதாச முன்னிலைப்படுத்துகிறார்.

தனது முக்கியமான இலக்குகளில் இரண்டைச் சாதிப்பதற்கு நவதாராளவாத, திறந்த சந்தைச் சீர்திருத்தங்களில் இருந்து ஒரு நகர்வைச் செய்யவேண்டியது அவசியம் என்று மெய்யாகவே பிரேமதாச விளங்கிக்கொண்டிருக்கிறார் போலத்தெரிகிறது ; (1) ஐக்கிய தேசிய கட்சியின் பழைய தலைமுறை தலைவர்களின் பொருளாதார மற்றும் சமூகக்கொள்கைகளில் இருந்து தெளிவாக விடுபடுவது ; (2) தனது சொந்த விசேடமான சமூகத்த்தளத்துக்கு -- அதாவது நகர்ப்புற, கிராமப்புற வறியவர்கள் மற்றும் குறைந்த மற்றும் நிலையான வருமானங்களைக்கொண்ட பரந்த திரளாகவுள்ள சமூக மட்டங்களுக்கு -- சேவை செய்வது. பரந்துபட்டளவில் இருக்கின்ற இந்த சமூகப்பிரிவினரே சமூக மற்றும் பொருளாதார வாழ்வின் சகல அம்சங்களிலும் சந்தைப்பொரளாதாரத்தை மையமாகக்கொண்ட சீர்திருத்தங்களின் சூறையாடல்களுக்கு பலியாகியிருக்கிறார்கள்.

ஓரங்கட்டப்பட்ட இந்த சமூகக்குழுக்களே " ஒரு புதிய சமூக ஒப்பந்தத்தின் " உருவகமாகப் பயன்படுத்துவது பற்றி பிரேமதாச கதைக்க ஆரம்பித்திருக்கின்ற ஆட்சியொன்றின் மைய சமூகத்தளமாக அமையப்போகின்றவையாக தெரிகிறது.

நான்காவதாக, பிரேமதாச தானும் பங்காளியாக இருக்கின்ற அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய வெறுப்புணர்வை மிகவும் நயநாகரிகமான முறையில் கையாளுவதைக் குறிப்பிடலாம்.ஊழல், செயற்திறனின்மை, பலவீனமான ஆட்சிமுறை, தவறான பொருளாதார முகாமைத்துவம், சுய அழிவுத்தனமான உட்சண்டை ஆகிய பல பிரச்சினைகள் காரணமாக அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழந்து பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.அரசாங்கத்தின் கொள்கைகளை வகுக்கின்ற உள்வட்டத்தவர்களுடன் தன்னை அடையாளப்படுத்துவதையும் பிரேமதாச மிகவும் எச்சரிக்கையுடன் தவிர்த்துவந்திருக்கிறார்.கடந்த வருடத்தைய அக்டோபர் அரசியலமைப்புச்சதி முயற்சிக்கு பின்னரும் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தந்திரோபாய ரீதியான கூட்டணியொன்றை பிரேமதாச பேணிவந்தார்.இவையெல்லாவற்றுடனும் சேர்த்து பிரேமதாச தேர்தல் அரசியலில்-- பதவியில் இருக்கின்ற அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் காணப்படுகின்ற உணர்வுகளை -- சமாளித்திருக்கிறார்.ஏனென்றால், 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி கூட்டணிக்கு வாக்களித்த மக்கள் ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் விக்கிரமசிங்கவும் செயதிருக்கும் பிரமாண்டமான தவறுகளுக்காக அவர்கள் இருவரையும் தண்டிப்பதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் பிரேமதாச எவருக்கும் சங்கடமில்லாத வகையில் மிகவும் நிதானமாக தனது ஆட்சி சமூகத்தின் உயர்மட்ட அரசியல் வர்க்கத்தவர்களின் ஆதிக்கத்திலான பழைய ஆட்சியில் இருந்து முற்றுமுழுதாக வேறுபட்டதாக அமையும் என்ற கருத்தை என்ற கருத்தை மக்களுக்கு கூறுகிறார்.அரசியல் அதிகாரத்தின் சமூகத் தளங்களில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது என்பதை மிகவும் திறமையான முறையில் பிரேமதாச சூசகமாகக் கூறிவந்திருக்கிறார்.

கோதாபயவின் தேர்தல் வாக்குறுதிகள் 

கோதாபய ராஜபக்சவின் பிரசாரங்களில் புத்தாக்கமான சிந்தனைகளைக் அவதானிக்கக்கூடியதாக இல்லை என்றபோதிலும், பழைய வகைமுறையிலேயே   அவர் ஒட்டிக்கொண்டிருக்கிறார்.அது பயனுறுதியுடைய விளைவுகளைத் தருமென்று அவர் நினைக்கிறார். 

அந்த வகைமுறை இராணுவ வழிகளில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னாள் இராணுவ அதிகாரி என்ற அவரின் அந்தஸ்தில் கவனம் செலுத்துகிறது ; இலங்கையை துரித நவீனமயமாக்கலுக்குள்ளாக்கும் அவரது நோக்கில் கவனத்தை செலுத்துகிறது ; பொது அபிப்பிராயம், பிரஜைகளின் செயற்பாடு, எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கான உரிமை, தடுப்புகளும் சமப்படுத்தல்களும் ஆகியவை  இல்லாமல் அரசை நிருவகிப்பதற்கான முறைமையொன்றை உருவாக்குவதென்ற அவரது வாக்குறுதில் கவனத்தைக் குவிக்கிறது. அவசரகால நிலை என்பது ஆட்சிமுறையின் வழமையான ஒரு நிலைவரமாக இருக்கக்கூடிய ஒரு தேசிய பாதுகாப்பு அரசாங்கத்தை அமைக்கப்போவதாகவும் ராஜபக்ச உறுதியளித்திருக்கிறார்.அரசினதும் அரசாங்கத்தினதும் பாதுகாப்பையும் மக்கள் பணிந்துபோவதையும் உறுதிசெய்வதற்கான ஒரு வழிவகையாக அவசரகாலச் சட்டங்கள் சாதாரணமானதும் கிரமமானதுமான சட்டங்களாக மாற்றியமைக்கப்படும். இலங்கையின் பலவீனமான ஜனநாயக அரசு படிப்படியாக ராஜபக்சாக்களின் நிகழ்ச்சி திட்டத்துக்கு ஏற்றமுறையிலான ஒரு பிரத்தியேகமான அரசாக மாற்றப்படும்.

தற்போதைய உலகளாவிய  போக்கை பிரதிபலிக்கின்ற ஒரு ஆட்சிமாற்றத்தையும் இது பிரதிபலிப்பதாக அமையும்.அதாவது நவதாராளவாத உலக மூலதனத்துக்கும் தாராள ஜனநாயகத்தை வெறுக்கின்றவர்களுக்கும் இடையிலான புதிய கூட்டணியே இந்த சமகால உலகளாவிய போக்கு என்று நோக்கப்படுகிறது. முன்னாள் அமெரிக்கப் பிரஜையொருவர் இலங்கையின் ஜனதிபதியாக வருவதற்கான சாத்தியப்பாட்டுக்கு புதிய அர்த்தத்தை கொடுப்பதாகவும் இது அமையலாம்.

தாராள ஜனநாயகத்துக்கு மேலாக பலம்பொருந்திய ஆட்சியாளருக்கும் பலம்பொருந்திய அரசாங்கத்துக்கும் -- தனிப்பட்டவர்களின் உரிமைகளுக்கு மேலாக தேசிய பாதுகாப்பின் முதன்மைக்கும் -- இலங்கையின் தற்போதைய ஆட்சிமுறை நெருக்கடியை தீர்த்துவைப்பதற்கு அவசியமானதாக ஜனநாயகத்துக்கு மேலாக எதேச்சாதிகாரத்துக்கும் முக்கியத்துவத்தைக் கொடுக்கின்ற இந்த ஆட்சிமுறைக்கான அணுகுமுறையை விரும்பி ஏற்றுக்கொள்பவர்கள் பலர் இலங்கையில் இருக்கிறார்கள் என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு அம்சமாகும்.

 எனவே ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு எந்த வகையான ஆட்சி தோன்றக்கூடிய சாத்தியம் இருக்கிறது ? இந்த கேள்வி மிகவும் முக்கியமானதாகும்.ஏனென்றால், 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலைப்போன்று இத்தடவையும் ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் அரசியலினதும்  அரசினதும் தன்மையை வரையறுக்கப் போகின்றது என்பது நிச்சயமானதாகும்.2015 இல் வாக்காளர்கள் முன்பாக ஒன்றுடன் மற்றது போட்டிபோடுகின்ற இலு பாதைகள் இருந்தன. அதாவது ஒன்று கடுமையான எதேச்சாதிகாரத்தன்மை கொண்ட -- சிங்களப் பெரும்பான்மைவாத ஆட்சி, மற்றது பலவீனமான ஒரு ஜனநாயகமாக இருந்தாலும் அரசியல்ரீதியில் தாராளபோக்குடைய ஆட்சி.2019 இலும் கூட சில மாற்றங்களுடன் கூடிய அதே போட்டித்தன்மையான இரு மாற்றுத்தெரிவுகளே மக்கள் முன்னிலையில் இருக்கின்றன.

அதனால் இத்தடவை கோதாபய ராஜபக்சவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான  ஜனாதிபதி பதவிக்கான போட்டி இரு தனிநபர்களுக்கு இடையிலானது என்பதை விடவும் பெரியதாகும்.இது பரஸ்பம் எதிராக நிற்கின்ற இரு அரசியல் செயற்திட்டங்களுக்கிடையிலான ஒரு போட்டியாகும்.எஞ்சியிருக்கும் மூன்று நாட்களும் இலங்கையின் எதிர்காலத்தை தீர்க்கமான ஒரு முறையில் உலுக்கப்போகின்றன.