(ஆர்.விதுஷா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய  ஜனநாயக முன்னணி ஆகிய இரு கட்சிகளினதும் தேர்தல் பிரசார செலவுகள் சுமார்  100 கோடி ரூபாவை எட்டியுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க தெரிவித்தார்.

நாளொன்றுக்கு சுமார் 1 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதியை குறித்த பிரதான இரு கட்சிகளும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக செலவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கான செலவுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளர். இதனை  தெரிவித்த அவர்  மேலும்  கூறியதாவது , 

முக்கிய இரு கட்சிகள் உள்ளடங்களாக,  ஐந்து  கட்சிகளை  சேர்ந்த  ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சுமார் 169 கோடி 30 இலட்சம் ரூபாவை  செலவிட்டுள்ளதாக உத்தேசிக்கப்படுகின்றது. 

இந்த கட்சிகள்  கடந்த  ஓக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி வரையிலேயே  இவ்வளவு  தொகை பணத்தை செலவு  செய்துள்ளதாக  அந்த அமைப்பு  சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இது வரையில் சுமார் 91 கோடி 90 இலட்சம் ரூபாவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்காக 70 கோடி 90 இலட்சம் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளனர். 

அநுரகுமார திஸாநாயக்க  போட்டியிடும் தேசிய மக்கள்  சக்தி இயக்கம் இதுவரையான காலப்பகுதியில்  தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக  சுமார் 5 கோடி 70  இலட்சம் ரூபாவினை செலவிட்டுள்ளது.    

அதேவேளை  சுயேட்சையாக போட்டியிடும் ஜன சேதாபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  பட்டாரமுல்லே  சீலரத்ன  தேரர் தமது  தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக 60 இலட்சம் ரூபாவினையும், தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க 20  இலட்சம் ரூபாவினையும்  செலவு  செய்துள்ளனர்.  

அச்சுஊடகம், இலத்திரனியல் ஊடகம், சமூக  ஊடக மற்றும் ஏனைய  செலவுகளை மையமாக  கொண்டே  இந்த அமைப்பு   தேர்தல் பிரச்சாரத்தின் போதான செலவினை கணித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில்  போட்டியிடும் 35  வேட்பாளர்களில் ஏனைய  வேட்பாளர்கள் மிகவும் சிறியளவிலான தொகையை யே தேர்தல் பிரசாரத்திற்காக செலவு  செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.