வடக்கு கிழக்கைச் சேர்ந்த சில தமிழ் தேசியக்கட்சிகளின் செயற்பாடுகள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கும் வாக்களிப்பு வீதத்தை குறைவடையச் செய்வதற்கும் ஏற்றவகையில் அமைந்துள்ளன. இத்தகைய கட்சிகளின் செயற்பாடுகள் யுத்தத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்களின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கும் நடவடிக்கையாகவே அமைந்து வருகின்றமை கவலையளிக்கும் விடயமாக உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரில் ஒருவரே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவுள்ளார். இந்த நிலையில் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு ஈ.பி.டி.பி. உட்பட சில கட்சிகள் ஆதரவு வழங்கியிருந்தன.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தமிழ் தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து ஒருமித்த முடிவினை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாடொன்றுக்கு வந்து அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கவேண்டும் என்ற நிலைப்பாடு மேலோங்கி வந்தது. இவ்விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையானது சுயாதீன குழுவொன்றினை அமைத்து கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டது.
ஆனால் தமிழ் மக்களின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்ற தோரணையிலேயே இந்தக்குழுவினரது செயற்பாடுகள் அமைந்திருந்தன. இதனால் இந்த முயற்சி கைகூடியிருக்கவில்லை. இதற்கு முன்னர் தமிழ் தேசிய பணிக்குழுவின் தலைவரும் முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினருமான நல்லையா குமரகுருபரனும் கட்சிகளை ஒன்றிணைத்து ஒருமித்த முடிவுக்கு வருவது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். ஆனால் அந்த முயற்சியும் பயனளிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்தே யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடி அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தனர். இதனடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாடொன்றுக்கு ஆறு கட்சிகளும் வந்ததுடன் அவ்விடயம் தொடர்பில் 13 அம்ச திட்டமும் தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த முயற்சி நடைபெற்று வந்தநிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது தீர்மானத்தை வெளியிட்டிருந்தது. தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டது. ஆனாலும் ஆறு கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல்களிலும் இந்தக்கட்சி பங்கேற்றிருந்தது. பின்னர் அந்த கலந்துரையாடல்களிலும் முரண்பட்டுக்கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியேறியது.
இந்த நிலையில் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து 13 அம்ச திட்டங்களின் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும் தென்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இனவாத பிரசாரம் காரணமாக அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. ஐந்து கட்சி தலைவர்களும் சந்தித்து அடுத்த கட்டம் குறித்து ஆராய்ந்த நிலையில் நீதியரசர் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியானது முந்திக்கொண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது கட்சியின் முடிவை அறிவித்திருந்தது.
இரு பிரதான வேட்பாளர்களும் 13 அம்ச கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமையினால் எந்தவொரு சிங்கள வேட்பாளரையும் ஆதரிக்குமாறு தம்மால் கோர முடியாது என்றும் மக்கள் விரும்பியவாறு வாக்களிக்குமாறும் விக்கினேஸ்வரன் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார். இதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி தனது முடிவை அறிவித்தது. அதன்பின்னர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புௌாட் என்பனவும் தனித்தனியாக முடிவுகளை எடுத்ததையடுத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பானது புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை தெரிவித்திருந்தது.
சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியும் 13 அம்ச கோரிக்கைகள் தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் கலந்துரையாடாமையினால் மக்கள் தமது விருப்பப்படி வாக்களிக்கலாம் என்று தமது தீர்மானத்தை அறிவித்திருந்தது.
ஜனாதிபதி தேர்தல் அறிவித்தவுடனேயே கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ கட்சிக்குள் முரண்பாடான நிலைமை ஏற்பட்டிருந்தது. அதன் முக்கியஸ்தரான எம்.கே. சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக அறிவித்ததையடுத்தே இந்த முரண்பாடு உருவானது. ஆனாலும் தனது முடிவில் விடாப்பிடியாக இருந்த சிவாஜிலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்ததுடன் தமிழ் மக்கள் சார்பிலான பொதுவேட்பாளர் தானே என்றும் தனக்கே தமிழ் மக்கள் ஆதரவு தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
சிவாஜிலிங்கத்தின் இந்த முடிவை ரெலோவின் தலைமைக்குழு கண்டித்ததுடன் அவர் போட்டியிலிருந்து விலகுவதற்கான கால அவகாசத்தையும் வழங்கியிருந்தது. கட்சியின் தலைமை நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரே தான் கட்சியின் பொறுப்புக்களிலிருந்து விலகிக்கொள்வதாக சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில்தான் கடந்த 6ஆம் திகதி வவுனியாவில் ரெலோவின் தலைமைக்குழு கூடி சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இந்த முடிவு எடுக்கப்பட்டு சில தினங்களில் ரெலோவின் செயலாளர் என் சிறிகாந்தா தலைமையில் யாழ்ப்பாணத்தில் கூடிய ரெலோவின் யாழ். மாவட்ட குழுக்கூட்டத்தில் இந்த தேர்தலில் சஜித் பிரேமதாசவை தாம் ஆதரிப்பதில்லை என்றும் சிவாஜிலிங்கத்திற்கே தமது ஆதரவு எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சிறிகாந்தா தலைமையிலான யாழ். மாவட்ட ரெலோவின் முடிவானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விடயம் தொடர்பில் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று முன்தினம் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். கட்சி கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பது என யாழ். மாவட்ட குழு எடுத்த முடிவானது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. கட்சியின் தலைமைக்குழு எடுத்த முடிவுக்கு மாறாக தீர்மானம் நிறைவேற்றியவர்கள் மீதும் அதற்கு ஆதரவாக செயற்படும் கட்சி அங்கத்தவர்கள் மீதும் கட்சியானது யாப்பு விதிகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்திருக்கின்றார்.
இதிலிருந்து ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் ரெலோவிற்குள் பிரிவினை ஏற்பட்டுள்ளமை நன்கு புலனாகின்றது. ரெலோவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு தேர்தல்களிலும் இவ்வாறான முரண்பாடுகள் ஏற்படுகின்றமை வரலாறாக உள்ளது.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரெலோவின் முக்கியஸ்தரான எம்.கே. சிவாஜிலிங்கம் போட்டியிட்டிருந்தார். இவர் போட்டியிட்டு 9ஆயிரம் வாக்குகள் வரையில் பெற்றிருந்தார். அப்போது தற்போதைய கட்சியின் செயலாளரான ஸ்ரீகாந்தாவும் இவருடன் இணைந்து செயற்பட்டிருந்தார். அந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவும் சரத் பொன்சேகாவும் போட்டியிட்டிருந்தனர். வாக்குகளை பிரிக்கும் வகையிலேயே இவர்கள் அந்தத் தேர்தலில் செயற்பட்டிருந்தனர்.
இதேபோன்றே கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தபோது அவருக்கு எதிராக களமிறங்குவதாக கூறி குருணாகலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டிருந்தார்.
தற்போது மீண்டும் இந்த ஜனாதிபதி தேர்தலிலும் அவர் களமிறங்கியுள்ளதுடன் அவருக்கு ஆதரவாக யாழ்ப்பாண கிளையும் தீர்மானம் எடுத்திருக்கின்றது. ரெலோவின் இத்தகைய செயற்பாடானது தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கே உதவுமே தவிர தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்திற்கு எந்தவகையிலும் நன்மையாக அமையப்போவதில்லை.
தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் யாருக்கு ஆதரவு என்ற விடயத்தில் ரெலோவுக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளும் ஏனைய கட்சிகளான தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் உறுதியற்ற செயற்பாடுகளும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கே உதவும். எனவே இந்த விடயத்தை கருத்தில் கொண்டு தமது ஜனநாயக உரிமையான வாக்குகளை உரிய வகையில் பயன்படுத்த தமிழ் மக்கள் முன்வரவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM