மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒக்டோபர் 26ம் திகதி தொடக்கம் நவம்பர் முதலாம் திகதி  வரையும் 74 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

இவ்வாண்டின் ஐனவரியிலிருந்து இதுவரை 1237 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்திய கலாநிதி வே. குணராஜசேகரம் தெரிவித்தார்.

இந்தக் காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் குணமடைந்தவர்களைத் தவிர இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தவாரம் டெங்கு தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்;டக்களப்பு வைத்திய அத்தியட்சகர் பிரிவில் இதுவரை 31 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், பட்டிருப்பு ஆரையம்பதி ஆகிய பிரதேசங்களில் தலா 9 பேர் டெங்கு நோயளர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து வருகின்ற நிலையில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருவதாகவும் இதனையிட்டு பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் மக்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர்.