( பிரதாப் )

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும்  கடும் பாதுகாப்பு நடவடிக்கையினை இங்கிலாந்து அரசு மேற்கொண்டுவருகின்றது.

அந்நாட்டின் விசேட விமானப்படையினர்  நாட்டின் மத்திய பகுதிகளின் வான்பரப்பில்  24 மணிநேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் நகரை தீவிரவாதிகள் குறிவைத்துள்ள நிலையில் லண்டன் நகரம் முழுவதும் கடும் பாதுகாப்பு பணிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் விசேட விமானப்படையினரின்  “ட்ரான்ஸ்போமர்ஸ்” என பெயரிடப்பட்டுள்ள நவீன  போர் விமானங்களை பயன்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்தின் மத்திய பகுதியில் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் தாக்குதல் நடத்தவிருப்பதாக நேற்றைய தினத்தில் சமூக வலைத்தளமான டுவிட்டர் வலைத்தளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

 

குறித்த டுவிட்டர் செய்தியில் “பரிதாபமான இங்கிலாந்து”  (pathetic England)“பும் இங்கிலாந்து (Boom England) போன்ற பதிவுகளோடு “ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் லண்டனின் மத்திய பகுதிகளில் தாக்குதல் நடத்த உத்தேசித்திருப்பதாகவும்” (To be honest I wouldn't go into Central London through June... or even July well to be honest I wouldn't go there at all especially by Tube.) செய்திகள் வெளியிட்டிருந்தனர்.

இதனடிப்படையிலேயே தற்போது இங்கிலாந்து முழுவதும் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.