நாட்டின்  எட்­டா­வது ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான    பிர­சா­ரப்­ப­ணிகள் யாவும்  நாளை புதன்­கி­ழமை  நள்­ளி­ர­வுடன் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில்  பிர­தான  ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள்  தீவிரப் பிர­சாரப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.  வாக்­கு­று­திகள்   அள்­ளி­வீ­சப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்ற சூழலில் மக்கள் எதிர்­வரும்  16ஆம் திகதி சனிக்­கி­ழமை தமது  ஏழா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியை தெரி­வு­செய்­ய­வுள்­ளனர். 

இந்த பின்­ன­ணியில் தேர்தல் தொடர்­பான விப­ரங்கள், வாக்­க­ளிப்பு முறைகள்,  மற்றும் ஜனா­தி­பதி தெரி­வு­செய்­யப்­ப­டு­வது எவ்­வாறு,   மக்கள் தமது வாக்­கு­களை   பயன்­ப­டுத்­து­வதன் முக்­கியம் என்­பன தொடர்பில்   இங்கு பார்க்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.   

நவம்பர்  16 ஆம் திகதி  இந்­த­நாட்டின் ஏழா­வது ஜனா­தி­ப­தியை  தெரி­வு­செய்­வ­தற்­கான  தேர்தல்  நடை­பெ­ற­வுள்ள நிலையில்   தேர்தல் களத்தில் 35 வேட்­பா­ளர்கள்   உள்­ளனர்.  இவர்­களில் பிர­தா­ன­மாக மூன்று வேட்­பா­ளர்­களே  மக்கள் மத்­தியில் அதிகம் பேசப்­ப­டு­கின்­றனர்.   ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் சார்பில்  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ,  ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியின் சார்பில்  அமைச்சர் சஜித் பிரே­ம­தாச,  தேசிய மக்கள் சக்­தியின் சார்பில் ஜே.வி.பி.யின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க ஆகிய மூவ­ருமே பிர­தான வேட்­பா­ளர்­க­ளாக மக்கள் மத்­தியில் பேசப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றனர். இவர்கள் மூவ­ருமே  தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர். 

அவற்றில்  இந்த நாட்டை அர­சியல், பொரு­ளா­தார, சமூக, கலா­சார ரீதியில் அடுத்த கட்­டத்­திற்கு எவ்­வாறு கொண்டு செல்­வது என்­பது தொடர்­பான  தமது கொள்­கை­க­ளையும் யோச­னை­க­ளையும் அணு­கு­மு­றை­க­ளையும்  வேட்­பா­ளர்கள் மூவரும் முன்­வைத்­தி­ருக்­கி­றார்கள். 

ஏழா­வது ஜனா­தி­பதி 

எட்­டா­வது  தேர்தல் 

முத­லா­வது ஜனா­தி­பதி தேர்தல் 1982 ஆம் ஆண்டு நடை­பெற்­றது.  அதன் பின்னர்  முறையே  1982 ,1988, 1994, 1999, 2005, 2010, 2015  ஆகிய வரு­டங்­களில் ஜனா­தி­பதி தேர்­தல்கள் நடை­பெற்­றன.    எனினும் முத­லா­வது  நிறை­வேற்று அதி­காரம் கொண்ட  ஜனா­தி­ப­தி­யாக ஜே.ஆ.ர் ஜய­வர்த்­தன  1977ஆம் ஆண்டே  அப்­போ­தைய  முத­லா­வது  குடி­ய­ரசு யாப்பில்   ஒரு திருத்­தத்தை செய்து அதை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்றி  பத­வி­யேற்­றுக்­கொண்டார்.  

அதன்­படி முத­லா­வது ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­றா­ம­லேயே  அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தின் ஊடா­கவே ஜே.ஆர். ஜய­வர்த்­தன  முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டார். அதன் பின்­னரே  மேற்­கு­றிப்­பிட்ட வரு­டங்­களில் ஜனா­தி­பதி  தேர்­தல்கள் நடை­பெற்­றன. இம்­முறை எட்­டா­வது ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெற்­றாலும் நபர் என்ற ரீதியில்    ஏழா­வது நிறை­வே­ற­்று தலை­வ­ரையே தெரி­வு­செய்ய இருக்­கின்றோம். முத­லா­வது நிறை­வேற்று அதி­கார  ஜனா­தி­ப­தி­யான  ஜே. ஆர். ஜய­வர்த்­தன  இரண்டு தட­வைகள் (1977- –1988)பதவி வகித்தார்.   பின்னர் ரண­சிங்க பிரே­ம­தாச ஒரு தடவை  (1988–1993)  ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்தார்.   

தொடர்ந்து  டி.பி. விஜே­துங்க மூன்­றா­வது ஜனா­தி­ப­தி­யாக   குறு­கி­ய­காலம்  (1993 மே–- 1994 நவம்பர் வரை) பதவி வகித்தார்.  அதனைத் தொடர்ந்து நான்­கா­வது ஜனா­தி­ப­தி­யாக  சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க இரண்டு தட­வைகள் (1994-–2005) வரை  பதவி வகித்தார்.  தொடர்ந்து மஹிந்த ராஜ­பக் ்ஷ  ஐந்­தா­வது ஜனா­தி­ப­தி­யாக இரண்டு தட­வைகள்  (2005–-2015)  பதவி வகித்தார். ஆறா­வது ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன    2015ஆம் ஆண்­டி­லி­ருந்து தற்­போதுவரை பத­வி­யி­லி­ருக்­கின்றார். அதன்­படி  ஏழா­வது ஜனா­தி­ப­தியை  நாம் இம்­முறை தெரி­வு­செய்ய இருக்­கின்றோம். 

வாக்­கா­ளர்கள்  

அந்­த­வ­கையில்   ஜனா­தி­ப­தியை  அல்­லது  எமது நாட்டின் அடுத்த  நிறை­வேற்று அதி­காரம் கொண்ட தலை­வரை   தெரி­வு­செய்­வ­தற்­கான பொறுப்பு  வாக்­கா­ளர்­க­ளி­டமே காணப்­ப­டு­கின்­றது. அதனால் வாக்­கா­ளர்கள் தமது வாக்­கு­களை  சரி­யான முறையில்  பயன்­ப­டுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.   எவ்­வாறு   ஜனா­தி­பதி தேர்­தலில் மக்கள் வாக்­க­ளிக்­க­வேண்டும் என்­பது தொடர்­பா­கவும் தெளி­வான புரி­தலை மக்கள் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும்.இம்­முறை ஜனா­தி­பதி தேர்­த­லா­னது 2018ஆம் ஆண்டு  வாக்­காளர்  இடாப்­பிற்கு அமை­யவே  நடை­பெ­று­கி­றது.  இது  எட்­டா­வது ஜனா­தி­பதி தேர்­த­லாகும்.  இம்­முறை தேர்­தலில்   15992096 பேர் நாட­ளா­விய ரீதியில் வாக்­க­ளிப்­ப­தற்கு தகு­தி­பெற்­றுள்­ளனர். 22 தேர்தல் மாவட்­டங்­க­ளிலும்   சுமார் 12 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட  வாக்­க­ளிப்பு  நிலை­யங்­களில்   16ஆம் திகதி காலை 7மணி­யி­லி­ருந்து மாலை 5 மணி­வரை தேர்தல்  நடை­பெறும். இம்­முறை தேர்­தலில் பல்­வேறு  சுவா­ரஷ்­ய­மான  விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. 

விசேட அம்­சங்கள் 

வழ­மை­யாக தேர்தல் வாக்­க­ளிப்­பா­னது  காலை 7 மணி­முதல் மாலை 4 மணி­வரை ஒன்­பது   மணித்­தி­யா­லங்­களே நடை­பெறும். ஆனால்  இம்­முறை   காலை 7 மணி­முதல்  மாலை  5 மணி­வரை  10 மணித்­தி­யா­ல­ங்கள் வாக்களிப்பு நடை­பெ­ற­வுள்­ளது. காரணம்  இந்த தேர்­தலில் 35 பேர் போட்­டி­யி­டு­வதால்  வாக்­க­ளிப்பு   சீட்டு 26  அங்­குலம் நீள­மா­ன­தாக   காணப்­ப­டு­கின்­றது.  இதுவே வர­லாற்றில் மிக நீள­மான வாக்குச் சீட்­டாகும்.  எனவே அதனைக் கையாள்­வதில் அனைத்துத் தரப்­பி­ன­ருக்கும் மேல­திக நேரம் தேவை என்­பதால்   வாக்­க­ளிப்பு நேரம்  ஒரு மணித்­தி­யா­லத்­தினால்  அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.  அதே­போன்று  இம்­முறை தேர்­தலில் பத­வியிலிருக்­கின்ற ஜனா­தி­ப­தியோ,   பிர­த­மரோ, எதிர்க்­கட்சித் தலை­வரோ போட்­டி­யி­ட­வில்லை. அத்­துடன் 20 வரு­டங்­களின் பின்னர்   பெண் வேட்­பாளர் ஒருவர் இம்­முறை கள­மி­றங்­கி­யுள்ளார். இதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு இறு­தி­யாக பெண் வேட்­பாளர்  என்ற வகையில் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க போட்­டி­யிட்­டி­ருந்தார். 

அடை­யாள அட்டை 

வாக்­க­ளிப்பு எனும்­போது வாக்­க­ளிப்­ப­தற்கு தேசிய அடை­யாள அட்டை கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனினும்  தேர்தல் ஆணைக்­கு­ழு­வினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள   ஏனைய  அடை­யாள அட்­டை­க­ளையும் பயன்­ப­டுத்த முடியும். அதன்­படி   தேசிய  அடை­யாள அட்­டைக்கு மேல­தி­க­மாக  செல்­லு­ப­டி­யாகும் கட­வுச்­சீட்டு, சாரதி  அனு­ம­திப்­பத்­திரம், முதி­யோ­ருக்­கான அடை­யாள அட்டை, ஓய்­வூ­திய அடை­யாள அட்டை, மத­கு­ரு­மார்­க­ளுக்­கான அடை­யாள அட்டை போன்­றன  அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.  இவை எது­வுமே  இல்­லா­த­வர்­க­ளுக்கு   தேர்தல் ஆணைக்­குழு தற்­கா­லிக அடை­யாள அட்­டை­களை விநி­யோ­கித்து வரு­கின்­றது. 

வாக்­க­ளிப்­பது எவ்­வாறு? 

ஜனா­தி­பதி தேர்­தலில் வாக்­க­ளிக்­கும்­போது   வாக்­கா­ளர்­க­ளுக்கு பல  தெரி­வுகள் உள்­ளன.  அதா­வது வாக்­காளர் வாக்­க­ளிப்புச் சீட்டின் 35 வேட்­பா­ளர்­களின்  பெயர்­களும் சின்­னங்­களும் இருக்கும். 

வாக்­கா­ளர்கள்   தமக்கு பிடித்த   வேட்­பா­ளரின் சின்­னத்­திற்கு முன்னால் உள்ள பெட்­டியில் X புள்­ள­டி­யிட முடியும்.   மேலும்  விருப்­பத்­தெ­ரிவை   மேற்­கொள்ள வேண்­டு­மானால்  தமக்கு  முத­லா­வது  பிடித்த வேட்­பா­ள­ருக்கு முன்னால் 1 என்ற  இலக்­கத்தை  இட்­டு­விட்டு இரண்­டா­வது பிடித்த வேட்­பா­ள­ருக்கு எதிரே 2 என்ற இலக்­கத்தை இட­மு­டியும்.  மூன்­றா­வது  விருப்பத் தெரிவும் வாக்­கா­ள­ருக்கு  இருப்பின் அந்த வேட்­பா­ளரின் சின்­னத்­துக்கு  முன்­பாக  உள்ள பெட்­டியில்   3 என்ற இலக்­கத்தை இடலாம்.  

அல்­லது  ஒரு வேட்­பா­ள­ருக்கு 1 என்றும்  மற்­றொரு வேட்­பா­ள­ருக்கு 2 என்றும்  வாக்­க­ளிக்க முடியும்.  இதுவே வாக்­க­ளிக்கும் முறை­யாகும். மாறாக   ஒன்­றுக்கு மேற்­பட்ட வேட்­டா­ளர்­க­ளுக்கு  X என்று புள்­ள­டி­யிட்டால்  அவை நிரா­க­ரிக்­கப்­படும்.  அத்­துடன்  ஒரு வேட்­பா­ள­ருக்கு  X என்று  புள்­ள­டி­யிட்­டு­விட்டு விருப்ப தெரிவு  வேட்­பா­ள­ருக்கு இலக்கம் ஒன்­றையோ அல்­லது இரண்­டையோ இட்டால் அந்த வாக்­குச்­சீட்டு  நிரா­க­ரிக்­கப்­படும்.  அத்­துடன்   எந்­த­வொரு வாக்­குச்­சீட்­டிலும்  வெறு­மனே இரண்டு, அல்­லது மூன்று என்ற இலக்­கங்­களை இட்­டாலும் அவையும் நிரா­க­ரிக்­கப்­படும்.  

ஏன் விருப்பத் தெரிவு? 

இந்த விருப்பத் தெரிவு வாக்­க­ளிப்பு விட­யத்தில்  மக்­க­ளுக்கு சில குழப்­பங்கள் காணப்­ப­டு­கின்­றன.  ஆனாலும்     இந்த விட­ய­தா­னத்தை சரி­யாக புரிந்­து­கொண்டு வாக்­க­ளித்தால்   குழப்­பங்கள் ஏற்­ப­டாது. காரணம் இவ்­வாறு  விருப்பத் தெரிவு முறைமை இருப்­ப­தற்கு   ஒரு முக்­கிய காரணம்  இருக்­கி­றது.    ஜனா­தி­பதி தேர்­தலில் ஒருவர் வெற்­றி­பெற்று  ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­ப­டு­வ­தற்கு அவர்  அளிக்­கப்­பட்ட செல்­லு­ப­டி­யான வாக்­கு­களில்  50 வீத­மான வாக்­கு­களைப் பெற­வேண்டும்.  அதா­வது 50 வீதத்­துடன் அவர் ஒரு­வாக்கை சேர்த்து பெற­வேண்டும். அவ்­வாறு பெறு­ப­வரே  ஜனா­தி­ப­தி­யாக அறி­விக்­கப்­ப­டுவார். 

எனினும்  தேர்தல் ஒன்றில்  எந்­த­வொரு வேட்­பா­ளரும்  அளிக்­கப்­பட்ட செல்­லு­ப­டி­யான வாக்­கு­க­ளில்  50 வீத­மான வாக்­கு­களை பெறா­விடின்  மற்­று­மொரு தேர்­தலை நடத்­தாமல்  ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்கே இந்த விருப்பத் தெரிவு முறைமை  பிர­யோ­கிக்­கப்­ப­டு­கி­றது.  அப்­ப­டி­யாயின் எவ்­வாறு  இந்த விருப்பத் தெரிவு முறைமை பிர­யோ­கிக்­கப்­படும்  என்ற கேள்வி மக்கள் மத்­தியில் எழலாம்.   

  எந்­த­வொரு வேட்­பா­ளரும்  50 வீத  வாக்­கு­களை பெறா­விடின் எவ்­வாறு  இந்த விருப்பத் தெரிவு முறைமை பிர­யோ­கிக்­கப்­படும் என்­பதை விரி­வாக பார்க்­கலாம்.   தற்­போது 35 வேட்­பாளர்  போட்­டி­யி­டு­வதால்    யாருக்கும் 50 வீத­மான வாக்கை பெற முடி­யா­மல்­போய்­வி­டுமோ என்ற கருத்­தியல்  நில­வு­கி­றது. எனதோன் இம்­முறை  விருப்பத் தெரிவு விடயம்   பெரி­தாக மக்கள் மத்­தியில் பேசப்­ப­டு­கின்­றது. அது எவ்­வாறு என்று பார்ப்போம். 

 எவ்­வாறு விருப்பத் தெரிவு பிர­யோ­கிக்­கப்­படும்? 

உதா­ர­ண­மாக  ஜனா­தி­பதி தேர்தல் களத்தில் A, B, C, D, E ஆகிய  ஐந்து வேட்­பா­ளர்கள் உள்­ளனர் என வைத்­துக்­கொள்வோம்.   ஜனா­தி­பதி தேர்­தலில்   அளிக்­கப்­பட்ட செல்­லு­ப­டி­யான  மொத்த வாக்­குகள் 100 என்று எடுத்­துக்­கொள்வோம்.  அப்­ப­டி­யாயின்   ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­ட­வேண்­டி­யவர்   50 வீத வாக்­கு­களை பெற­வேண்டும்.    

ஆனால் தேர்தல்  முடி­வின்­படி  A  என்ற வேட்­பாளர்  40 வாக்­கு­க­ளையும் B  என்ற வேட்­பாளர் 35  வாக்­கு­க­ளையும் C  என்ற வேட்­பாளர் 15 வாக்­கு­க­ளையும்  D  என்ற  வேட்­பாளர் 6 வாக்­கு­க­ளையும்  E  என்ற  வேட்­பாளர்  4 வாக்­கு­க­ளையும்  பெற்­றுள்­ள­தாக  எடுத் ­துக்­கொள்வோம். தற்­போது  இதில் யாருக்கும் 50 வீத வாக்­குகள் கிடைக்­க­வில்லை என்­பது தெளி­வாக தெரி­கின்­றது.   

இப்­போ­துதான் இந்த  இரண்­டா­வது அல்­லது மூன்­றா­வது வாக்­க­ளிப்பு  பிர­யோகம் கவ­னத்தில் எடுக்­கப்­படும்.  இதற்கு  இரண்டாம்  எண்­ணுதல் என்றும் கூறுவர்.   இந்த  இரண்டாம் எண்­ணுதல் செயற்­பாட்டில் முத­லா­வ­தாக முத­லி­ரண்டு இடங்­களைப்  பிடித்த  A, B  வேட்­பா­ளர்­களை தவிர ஏனைய வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டுவர். 

அதன் பின்னர்    C, D, E,  ஆகிய வேட்­பா­ளர்கள் பெற்­றுக்­கொண்ட மொத்த 25   வாக்­க­ளிப்பு சீட்­டு­களில்    அளிக்­கப்­பட்­டுள்ள  இரண்­டா­வது மூன்­றா­வது தெரிவு விருப்பு வாக்­குகள் எண்­ணப்­படும். அவ்­வாறு   C, D, E, ஆகிய  மூன்று வேட்­பா­ளர்­க­ளி­னதும் வாக்­குச்­சீட்­டுகள் மீண்டும்  எண்­ணப்­பட்டு அவற்றில் A அல்­லது B ஆகிய வேட்­பா­ளர்­க­ளுக்கு விருப்பத் தெரி­வுகள்  உள்­ள­னவா எனப் பார்க்­கப்­படும். அத­னால்தான் அதனை இரண்டாம் எண்­ணுதல் என்று கூறு­கின்றோம். உதா­ர­ண­மாக   D  என்ற   வேட்­பா­ளரின் ஒரு வாக்­க­ளிப்பு சீட்டில்  A  என்ற வேட்­பா­ள­ருக்கு இரண்­டா­வது விருப்பத் தெரிவும் B  வேட்­பா­ள­ருக்கு மூன்­றா­வது விருப்பத் தெரிவும் வழங்­கப்­பட்­டி­ருந்தால் அந்த வாக்­குச்­சீட்டு  A  என்ற வேட்­பா­ளரின் வாக்­கு­க­ளுடன் சேர்க்­கப்­படும்.    அல்­லது   B  என்ற வேட்­பா­ள­ருக்கு இரண்டாம் விருப்பத் தெரிவும் A  என்ற வேட்­பா­ள­ருக்கு மூன்­றா­வது  தெரிவு  வழங்­கப்­பட்­டி­ருப்பின் அந்த வாக்­குச்­சீட்டு   B  என்ற வேட்­பா­ளரின் வாக்­கு­க­ளுடன் சேர்க்­கப்­படும். 

இதே­வேளை  ஒரு வாக்­காளர்  C  என்ற   வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளித்த வாக்­குச்­சீட்டில் இரண்­டா­வது விருப்பு வாக்கை  E  என்ற வேட்­பா­ள­ருக்கு வழங்­கி­விட்டு  மூன்­றா­வது விருப்பு  வாக்கை A   அல்­லது  B  என்ற வேட்­பா­ளர்­களில்  யாரா­வது ஒரு­வ­ருக்கு வழங்­கி­யி­ருந்தால்     அவ­ருக்கு வழங்­கப்­படும்.  எனினும் குறித்த வாக்­குச்­சீட்டில் இரண்­டா­வது தெரிவு  C க்கும்  மூன்­றா­வது விருப்பு வாக்கு  E க்கும் வழங்­கப்­பட்­டி­ருந்தால் அது கவ­னத்தில் எடுக்­கப்­ப­டாது.  இந்த வகை­யி­லேயே   போட்­டியிலிருந்து நீக்­கப்­பட்ட  C, D, E  ஆகிய மூன்று வேட்­பா­ளர்­க­ளி­னதும்  வாக்­குகள்  மீள் எண்­ணப்­பட்டு   அதில்   A,  அல்­லது B க்கு விருப்பு வாக்­குகள் உள்­ள­னவா எனப் பார்க்­கப்­பட்டு   அவை  அந்த வேட்­பா­ளர்­களின்  வாக்­கு­க­ளுடன் சேர்க்­கப்­படும்.  

 அதா­வது முத­லி­ரண்டு ( A மற்றும் B) வேட்­பா­ளர்­களின் வாக்­கு­க­ளுடன் அவர்கள்   ஏனைய  வேட்­பா­ளர்­க­ளூ­டாக பெற்­றுக்­கொண்ட விருப்பு வாக்­குகள் சேர்க்­கப்­படும்.   அதன்­பின்னர் அந்த  இரண்டு பிர­தான வேட்­பா­ளர்கள்  விருப்பு வாக்­கு­க­ளுடன் பெற்­றுக்­கொண்ட மொத்த வாக்­குகள் இரண்­டாகப் பிரிக்­கப்­பட்டு அதில் 50 வீதம் பெறு­பவர்   ஜனா­தி­ப­தி­யாக   தெரி­வு­செய்­யப்­ப­டுவார்.   

இதன்­போது மேற்­கண்ட உதா­ர­ணத்தில் A  என்ற வேட்­பா­ள­ருக்கு    மூன்று விருப்பு வாக்­குகள் கிடைத்­தி­ருப்பின்  அவர் ஏற்­க­னவே பெற்­றுக்­கொண்ட  40 வாக்­கு­க­ளுடன் சேர்த்து   மொத்­த­மாக 43 வாக்­கு­களைப் பெறுவார்.  (A=40+3=43)  மறு­புறம் B என்ற வேட்­பாளர் 10 விருப்பு வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தால்  அவர்  ஏற்­க­னவே பெற்­றுக்­கொண்ட 35 வாக்­கு­க­ளுடன்   இவை சேர்க்­கப்­பட்டு அவர் 45 வாக்­கு­களைப் பெற்­றுக்­கொண்­ட­வ­ராக அறி­விக்­கப்­ப­டுவார்.  ( B=35+10=45).   

இப்­போது  A, B  ஆகிய இரு­வரும் பெற்ற மொத்த   வாக்­கு­க­ளான 88  ( 43+ 45=88)  வாக்­கு­களே   மொத்த செல்­லு­ப­டி­யான வாக்­கு­க­ளாக கணிக்­கப்­பட்டு  அதில் 50 வீதம் பெற்­றவர்  ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­ப­டுவார்.  இந்த உதா­ர­ணத்தைப் பார்க்கும் போது  88  இன்  50 வீதம் 44 காக காணப்படுகின்றது. அப்படி பார்க்கும்போது முதல் தடவை  குறைந்த வாக்குகளைப் பெற்ற  B  என்ற  வேட்பாளர் விருப்பு வாக்குகளில் A யைவிட அதிக வாக்குகளை பெற்றதால்  வெற்றிபெறுபவராக அறிவிக்கப்படுவார்.  இதன்போதும்  இருவரும் சமமான வாக்குகளைப் பெற்றால்   தேர்தல் ஆணைக்குழுவினால்  திருவுளச்சீட்டு முறை மூலம்   ஜனாதிபதி  தெரிவுசெய்யப்படுவார். 

 இதனால் தான்    ஜனாதிபதி தேர்தலில்   விருப்பு வாக்கு முறைமை பயன்படுத்தப்படுகின்றது.  வாக்காளர்களைப் பொறுத்தவரையில் இது சற்று குழப்பமானதாக இருந்தாலும் அதனை  சரியாக கணித்து வெற்றிபெறுபவரை அறிவிக்கும் பொறுப்பு தேர்தல்  ஆணைக்குழுவை சார்ந்ததாகும். அவர்கள் அதனை  சரியான முறையில் செய்வார்கள். 

எப்படியிருப்பினும்   இந்த தேர்தலில் வாக்காளர்கள்  தமது வாக்குகளை   சரியான முறையில்   அளிக்கவேண்டும்.  கடந்த ஒவ்வொரு தேர்தலிலும்  அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.  அவ்வாறில்லாமல்  வாக்காளர்கள் தமது வாக்கை சரியான முறையில் அளித்து  புதிய தலைவரை தெரிவுசெய்து கொள்வதற்கான ஜனநாயக  உரிமையை பயன்படுத்தவேண்டும்.     

வாக்களிப்பின்போது   ஜனாதிபதி தேர்தலுக்குரிய வாக்களிப்பு முறைமைக்கமைய வாக்காளர் தமது வாக்கை  நிராகரிக்கப்படாதவாறு   பிரயோகிக்கவேண்டும்.  இம்முறை  தேர்தல் முடிவுகள்  16ஆம் திகதி நள்ளிரவு   வெளியாகாது என்றும் 17 ஆம் திகதி பிற்பகல் வேளையிலேயே  முதலாவது முடிவை அறிவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.      எனவே   வாக்காளர்கள்  எவ்வாறான  தீர்மானத்தை  எடுக்கப்போகின்றார்கள் என்பதை  பார்ப்போம். 

-ரொபட் அன்­டனி -