Published by T. Saranya on 2019-11-12 10:50:58
(ஆர்.விதுஷா)
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்களுடைய நலனுக்கான பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி அமைச்சருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பெருந்தோட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று கொழும்பு ஜானகி ஹோட்டலில் இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்களுடைய நலனுக்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று தான் ஒரு தொழிலாளிக்கு நாளாந்த வேதனமாக 1500 ரூபாவினை பெற்றுக்கொடுத்தல். அதேபோல், அவர்களுடைய வாழ்க்கை தராதரத்தை உயர்த்தி அனைவருக்கும் வீடு என்னும் திட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மலையக தொழிலாளர்களையும் தேசிய நீரோட்டத்தில் இணைத்தல் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மலையக மக்கள் பல்வேறு பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டியதும் அதனை தீர்த்து வைக்க வேண்டியதும் அவசியமானதாகும். அதற்காக அவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.

அதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் ஊடாக பல பாடசாலைகளை உருவாக்கியுள்ளோம்.
விஞ்ஞான, கணித பாடங்களை கற்பிக்க கூடிய வகையிலான பாடசாலைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது மலையகத்துக்கு பல்கலைக்கழகமொன்றை கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
சில முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் 52 நாள் அரசியல் நெருக்கடியினால் தடைப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் தான் மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. அவர்கள் வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுக்கொடுக்கப்பட்டது. ஆகவே தான் தற்போது மலையக மக்களுக்கு எதிர்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான உரிமை கிடைக்கப்பெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ள நிலையில் அவர்களுக்கு சேறுபூசும் வகையிலான செயற்பாடுகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார்.