தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தமிழ் மக்களுக்கு ஆற்றிய உரையின் பகுதி. 

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளை மீண்டும் புனரமைப்பது எப்படி. இது குறித்து அவர்கள் முன்வைத்தது காணி தொடர்புடைய பிரச்சினை. இது தொடர்பில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மக்களுடைய காணி அனைத்தையும் மீண்டும் அவர்களுக்கு கையளிக்கப்படும். காணிகளை கையளிப்பது மாத்திரம் அல்ல அரச பாதுகாப்பு படையினர் காணிகளை தன்வசப்படுத்தியிருந்த காலப்பகுதிக்கான நஷ்டஈட்டுத்தொகையையும்  மக்களுக்கு வழங்க வேண்டும். 

ஒருவர் உயிரிழப்பதை விடவும் அவர் காணமால் போவது மிகவும் வருத்தமான ஒன்றாகும். மரணம் என்பது சில காலங்களில் மறந்துபோகும் தன்மை கொண்டது.

ஆனால் காணமால் போவது அப்படி அல்ல. வவுனியாவில் உள்ள மெனிக் பாரம் முகாம் உள்ள பகுதிக்கு நான் விஜயம் செய்திருந்தேன். அப்போது ஒருவர் என்னிடம் கூறினார், நானும் குடும்பமும் போரின் போது சரணடைந்து பாலத்துக்கு அருகில் சென்றிருந்த போது அங்கு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தனது மனைவியும் மகளும் கொல்லப்பட்டதாக கூறினார்.

 இதனை யார் செய்தது என்பது தெரியாது. அந்த பாலத்துக்கு அருகில் சென்று அழவேண்டும் என்று தோன்றுவதாக  அவர் என்னிடம் கூறினார். இதுதான் வேதனையின் வடிவம். இந்த வேதனை என்னவென்பது எனக்கும் நன்றாக தெரியும். ஏனெனில் எனது சகோதரரும் காணாமல் போனதால் எனக்கும் அந்த வலி உள்ளது.

 காணமால் போனவர் வருவார் என பத்து வருடங்களாக எதிர்பார்த்து இருக்கக்கூடிய அந்த வேதனையை யாராலும் சொல்லிவிட முடியாது. காணமால் போன உறவுகள் எப்போதாவது வருவார்கள் என அவர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். காணமால் போனோர் விடயத்தில் அரசாங்கத்தால் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும். அது காலம் தாழ்த்தப்படாத செயலாக இருக்க வேண்டும். அதுதான் எதிர்பார்ப்பு.

 இது தொடர்பில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக கூறி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். 

நான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்த போது அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞன் ஒருவர் என்னை சந்தித்தான். அவர் 14 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

தமீழீழ விடுதலைப்புலிகளின் அடையாள அட்டையை வைத்திருந்தமைக்காகவே தான் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். அவர் வைத்திருந்த அடையாள அட்டையில் யார் கையொப்பமிட்டது என கேட்டேன். தயா மாஸ்டர் என அவர் பதிலளித்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் அடையாள அட்டையில் கையொப்பம் இட்டவர் வெளியிலும் அதனை வைத்திருந்தவர் சிறையிலும் உள்ளனர். இதே போன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பின்னர் அந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கியவர் கே.பி. இவர் போன்றோர் இருந்திருக்காவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள்  இயக்கம் இவ்வளவு வளர்ச்சி கண்டிருக்காது. கே.பியே  விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோகத்திற்கு பொறுப்பாக இருந்தார். புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கும் பொறுப்பாக அவரே  இருந்தார். அவரே அவ்வியக்கத்திற்கு நிதி சேகரிக்கும் முக்கிய கடமையையும் கொண்டிருந்தார். 

பிரபாகரன் போரில் களத்தில் பிரதானியாக இருந்த போது கேபியே முக்கிய செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்தார். ஆனால் இன்று கேபி வெளியே அந்த இளைஞன் உள்ளே. 

நீதிமன்றத்தின் மூலம் அவருக்கு அதிகூடிய தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் ஐந்து வருடங்களே சிறை தண்டனை கிடைத்திருக்கும். எனினும் அவர் 14 ஆண்டுகளாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இது நீதியான விடயம் அல்ல. ஆகவே அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். 

இதையே ஒரு விவாதமாக எடுத்துக்கொண்டால் கே.பி, தயா மாஸ்டர் மற்றும் அவர்களின் நண்பர்களாக கருணா போன்றவர்களை எவ்வாறு விடுவித்திருக்க முடியும். இது நீதியல்ல. அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பது கூறியுள்ளோம். 

அதேபோல் போரில் கணவனை இழந்த பெண்களை பாதுகாக்க அரசாங்கத்திருக்கு பொறுப்பு உள்ளது. அவர்களின் கணவன்மார் இயக்கத்தில் இருந்து உயிரிழந்திருக்கலாம், பிள்ளைகள் கூட புலிகளின் அமைப்பில் இணைந்து இறந்திருக்கலாம்.

 இதனை ஒருபுறம் வைத்திவிட்டு பார்த்தால் இவர்கள் இலங்கை நாட்டின் பிரஜைகள் இல்லையா? அவர்கள் குறித்து செயற்பட வேண்டியது அரசாங்கத்தின்  பொறுப்பல்லவா? அவ்வாறு செயற்பட்டால் அது பிழையானதா? பெண்கள் தலைமையேற்று நடத்திய குடும்பங்களுக்கு சில கொடுப்பனவுகள் வழங்க முன்வந்த போது புலிகளுக்கு பணம் கொடுப்பதாக சிலர் அதனை தடுத்தனர். 

எனினும் பெண்கள் பொறுப்பேற்று நடக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அது குறித்து செயற்பட அதிகார சபையொன்றை நிறுவி அதன் மூலம் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான யோசனை எமது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் முக்கிய பிரச்சினையாக உள்ளது அதிகாரம் தொடர்பான பிரச்சினையாகும். எமது நாட்டில் எந்தவொரு இனத்தையும் நிராகரித்துவிட்டு அதிகாரத்தை யாரும் தம்வசம் கொண்டிருக்க முடியாது. அதிகார வியூகத்தில் சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற அடிப்படையில் அனைவருக்கும் சம உரிமை உண்டு. அதிகாரத்தில் அணைத்து இன மக்களுக்கும் பங்குதாரர்கள் என்ற அடிப்படையில் நாம் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடக ஏற்றுக்கொள்கிறோம். இதேவேளை நாட்டில் எந்தவொரு இனத்தவரும் தனிமைப்படுத்த இடம் தரப்படமாட்டாது. 

அதேபோல் பாடசாலையில் கூட அந்த பிரிவினைவாதம் இருக்கக்கூடாது. மாணவர்கள் அனைவரும் கணிதம் உட்பட அனைத்துப்பாடங்களையும் ஒன்றாக கற்கின்ற போது சமயம் என வருகின்ற போது அவர்கள் வேறு வேறாக பிரிக்கப்படுகின்றனர். இது யதார்த்தமான விடயம் அல்ல.

எனவே கல்விக் கொள்கையில் எல்லா பாடசாலைகளிலும் மாணவர்கள் எல்லா மதங்களையும் கற்க வேண்டும் என்ற கொள்கையை வகுக்கவுள்ளோம். யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். ஆனால் ஏனைய மதங்களில் என்ன அடங்கியுள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறான பாடசாலைகளை உருவாக்குவது தொடர்பில் ஆராய்கின்றோம். 

பாடசாலையில் உள்ள கிரிக்கெட் அணியில் கூட சகல மதங்களை இனங்களை சேர்ந்த 11 மாணவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் ஒன்றிணைந்து செயற்பட நாம் கரகோஷம் எழுப்ப வேண்டும். அவ்வாறான நாடே எமக்கு வேண்டும். இனப்பிரச்சினை காரணமாக நாம் பட்ட கஷ்டங்களை அடுத்த பரம்பரை க்கு கொண்டு செல்லக்கூடாது. நாம் கண்ட அநியாயங்களை இனியும் கொண்டுசெல்லக்கூடாது. அது நல்ல மனிதருக்கான அடையாளம் அல்ல. ஆகவே குறுகிய நோக்கம் கொண்ட அரசியலை தவிருந்து அனைவரும் சமத்துவம் கொண்ட அரசியல் ஒன்றினை ஸ்தாபிப்போம்.

கட்டணம் செலுத்தப்பட்டது