(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 

678 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ள சட்ட மா அதிபர், இந்த வழக்கை விசாரிக்க மூவர் கொண்ட சிறப்பு ட்ரயல் அட் பார் ஒன்றினை அமைக்குமாறு பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்குத் தாக்கல் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றுக்கு கடிதம் ஊடாக அறியப்படுத்தியுள்ள சட்ட மா அதிபர், அந்த கடிதத்தை பொதுவாக காட்சிப்படுத்துமாறு கோரியதை அடுத்து தற்போது அக் கடிதம் மேல் நீதிமன்ற அறிவித்தல் பலகையில்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக, இந்த சம்பவம் தொடர்பிலான கோவைக்கு பொறுப்பாக உள்ள அரசின் சிரேஷ்ட சட்டவாதி ஜனக பண்டார தெரிவித்தார்.

இந் நிலையிலேயே சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, நீதிமன்ற கட்டமைப்பு சட்டத்தின் 12 (2) ஆம் அத்தியாயம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 450 (4) ஆம் அத்தியாயத்தின் கீழ் பிரதம நீதியரசரிடம் ட்ரயல் அட் பாருக்கான வேண்டுகேளை விடுத்துள்ளார். 

குறித்த விவகாரத்தின் பாரதூர தன்மை, சர்வதேச அவதனைப்பு உள்ளிட்ட விவடயங்களை சுட்டிக்காட்டி அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கடடிக்கொண்டு, எந்த பயங்கரவாத செயல்களுடனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புபடாத அப்பாவி சிவிலியன்களை கடத்திச் சென்று  இரகசியமாக தடுத்து வைத்து, கப்பம் பெற முயற்சித்து இறுதியில் அந்த 11 பேரையும்  கொலை செய்தமை தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.