(நா.தனுஜா)

கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவின் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நம்புவதற்குக் கடினமாக உள்ளது.

அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்கள் எதுவும் தற்போதுவரை கோத்தாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவில்லை.

அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டோரின் பெயர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலிலும் கோத்தாபயவின் பெயர் உள்ளடங்கியிருக்காத நிலையில், அமெரிக்கப் பிரஜாவுரிமையை தான் கைவிட்டிருப்பதை உறுதிப்படுத்தி அறிவித்தலொன்றை விடுக்குமாறு அமெரிக்கத் தூதரகத்திடம் கோத்தாபய ராஜபக்ஷ கோராதது ஏன் என்று ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழுவொன்று கேள்வி எழுப்பியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எழுந்திருக்கும் நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் ஜயசூரிய, பர்ஹான் காசீம், திஸத் விஜயகுணரத்ன, எம்.சி.ஜயலால் ஆகியோரால் இன்று கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டது.

அங்கு மேலும் குறிப்பிடப்பட்டதாவது:

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருக்கும் கோத்தபய ராஜபக்ஷ்வின் அமெரிக்கக் குடியுரிமை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள சட்டரீதியான பிரச்சினைகள் மற்றும் சர்ச்சைகள் தொடர்பில் நேற்று  சட்டத்தரணிகள் குழுவொன்றினால் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சில கருத்துக்கள் வெளியிடப்பட்டன. 

ஏனெனில் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு சார்பில் வெளியிடப்பட்ட அக்கருத்துக்களை சட்டத்தரணிகள் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதால் இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டுமென்று கருதுகின்றோம்.

இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. 

அதற்கு எதிராக பிரதிவாதிகளால் ஏதேனும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றதா என்று ஆராய்ந்த பின்னரே அவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படும். அந்தவகையில் கோத்தாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணிகளால் குறித்த வழக்கிற்கு எதிராக சில காரணிகள் முன்வைக்கப்பட்டன. 

இத்தகைய வழக்கொன்றைத் தாக்கல் செய்வதற்கு மனுதாரர்கள் சட்டரீதியான உரித்துடையவர்களா, மனுதாரர்கள் காலந்தாழ்த்தி இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் அவசியமான தரப்பினர் தொடர்புபடுத்தப்படவில்லை, இன்னமும் விசாரணைகள் இடம்பெற்றுவரும் விவகாரமொன்று தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகளை மேற்கொள்ள முடியுமா ஆகிய எதிர்ப்புக்களே கோத்தாபயவின் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டிருந்தன.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அமெரிக்க கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சுற்றுலாப்பயண வீசாவில் இலங்கைக்கு வருகைதந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை, இரட்டைப் பிரஜாவுரிமையை முறையாகப் பெற்றுக்கொள்ளாமை, வெளிநாட்டுப் பிரஜாவுரிமையை முறையாக நீக்கிக்கொள்ளாமல் இந்நாட்டுப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டமை ஆகிய காரணிகளை உள்ளடக்கி நீதவான் நீதிமன்றத்தில் 2019 செப்டெம்பர் மாதம் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அவ்வழக்கின் விசாரணைகள் முடிவடையாத நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு வழங்கமுடியாது என்றே நீதிபதிகள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டினர்.

அதேவேளை அவ்வறிக்கையில் 34 ஆம் பக்கத்தில் முக்கியமான விடயமொன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்பானது, ஏற்கனவே நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் விசாரணை செய்வதற்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எவ்வகையில் இடையூறாக அமையாது என்று அதில் கூறப்பட்டள்ளது.

இந்நிலையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட வேளையில், மக்களின் வாக்குரிமையின் ஜனநாயகத்தன்மையை உறுதிசெய்வதற்காக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் விசேட தீர்மானமொன்றை மேற்கொண்டிருந்தார்கள். 

அதாவது தமது வேட்புமனுவுடன் 'நான் வேறு எந்த வெளிநாட்டினதும் குடியுரிமையைக் கொண்டிருக்கவில்லை' என்ற உறுதிப்பத்திரத்தையும் அனைத்து வேட்பாளர்களும் கையளிக்க வேண்டுமென்பதே அதுவாகும்.

வேறு ஏதேனும் நாட்டின் குடியுரிமையைக் கொண்டிருந்தவர்கள் இருப்பார்களாயின், அவர்கள் அதனை நீக்கிக்கொண்டமைக்கான ஆதாரங்கள் அனைத்தையும் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் விதமாகவுமே அத்தகையதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் தேர்தல்கள் ஆணையாளரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட தகவல்களின் பிரகாரம், கோத்தாபய ராஜபக்ஷ அவரது வேட்புமனுவுடன், வேறு நாட்டின் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கவில்லை என்ற உறுதிப்பத்திரத்தை சமர்ப்பித்திருக்கிறார். 

ஆனால் நேற்று அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் நீக்கிக் கொண்டிருப்பதாக ஊடகங்களிடம் காண்பித்த ஆவணங்கள் எதனையும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்திருக்கவில்லை. இந்த ஆவணங்களை வேட்புமனுத்தாக்கலின் போதே கையளிப்பதற்கான சந்தர்ப்பம் கோத்தாபயவிற்கு இருந்தது. எனினும் இருவாரங்களுக்கு முன்னர் குறித்த ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் காண்பித்ததாக கோத்தாபய தரப்பு சட்டத்தரணிகள் நேற்று கூறினார்கள்.

எனின் அதனைச் செய்வதற்கு வேட்புமனுத்தாக்கலின் பின்னர் இவ்வாறு நாட்கள் காலந்தாழ்த்தியது ஏன்? அவற்றின் பிரதிகளை ஏன் சமர்ப்பிக்கவில்லை? என்ற கேள்விகள் எழுகின்றன என ஜனாதிபதி சட்டதரணிகள் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிபடத்தக்கது.