(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

விளையாட்டுக்கள் தொடர்பான  தவறுகளை தடுக்கும் சட்டமூலம் இன்று ஏகமனமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இந்த சட்டத்தினூடாக ஆட்டநிர்ணயம், மோசடி, சட்டவிரோதமாக பந்தயம் பிடித்தல் என்பவற்றை தடுக்கவும் விசாரணை நடத்துவதற்காகவும் விசேட புலனாய்வு பிரிவு அமைக்கப்பட இருப்பதோடு நீதிமன்றத்தினூடாக குற்றவாளியாக அறிவிக்கப்படுபவருக்கு  2 இலட்சம் ரூபா அபராதமும் 3 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.இது தவிர பந்தயம் பிடிக்கும் அதற்கு ஊக்குவிக்கும் அதற்கு உடந்தையாகும் நபர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா  அபராதம் அல்லது 10 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்டமூலத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ சபையில்  முன்வைத்தார். இதற்கு ஆளும் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் எம்.பிகள் உரையாற்றியதோடு சகலரும் சட்டமூலத்திற்கு ஆதரவாக கருத்து முன்வைத்தார்கள். 

இதன்போது  எதிர்க்கட்சி உறுப்பினர் திலங்க சுமதிபால எம்.பி முன்வைத்திருந்த திருத்தங்களை அமைச்சர் நிராகரித்தார்.  

இந்த சட்டமூலத்தின் முக்கியத்துவம் கருதி விசேட பாராளுமன்ற அமர்வொன்றை நடத்த முன்வந்தது குறித்து பிரதமருக்கும் சபாநாயகருக்கும் நன்றி தெரிவித்த அமைச்சர், விளையாட்டுத்துறையில் இருந்து  மோசடிகளை ஒழிக்க விரும்பாதோர் இந்த சட்டமூலத்தை எதிர்க்க முடியும் என்றார்.

இந்த சட்டமூலத்தினூடாக விளைாயாட்டுத் துறை தூய்மையடையும் என்றும் கூறினார்.