மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் படித்த இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்பாடல் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. குறிப்பாக அந்த காலத்தில்தான் மலையகம் சுவர்ணபூமியாக மாற்றப்பட்டது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவிற்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த மாகாண அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன்,
சஜித் பிரேமதாச தோட்டத்தொழிலாளர்களுக்கு 1500 ரூபா அடிப்படை சம்பளம் வழங்குவதாக கூறுகிறார். எமது வேட்பாளர் ஆயிரம் ரூபாய் பெற்றுத்தருவதாக எமது மக்களை அழைத்துக் கூறினார். 50 ரூபாவைப் பெற்றுக்கொடுக்க முடியாத சஜித் பிரேமதாச எவ்வாறு 1500 ரூபாவை ப்பெற்றுக்கொடுப்பார்? மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் படித்த இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்பாடல் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது. தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பிலும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பிலும் இதுவரையிலும் சஜித் பிரேமேதாச பாராளுமன்றில் பேசியது இல்லை. ஆனால் இன்று ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதனால் இன்று தொழிலாளர்கள் தொடர்பில் தேர்தல் மேடையில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார்.
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை இடம்பெறுகின்றபோது தோட்ட கம்பனிகளுக்கு அழுத்தத்தினைக் கொடுத்து சம்பள பிரச்சினையை தீர்த்து வைத்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ. ஆகையால்தான் அவர் போன்ற ஒரு தலைவரை மேலும் நாம் உருவாக்க வேண்டும். மாற்றுக் கட்சியினர், கோத்தபாய ராஜபக் ஷவிற்கு சிறுபான்மை மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்கிறார்கள். ஆனால் எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க இணைந்து கோத்தபாய ராஜபக் ஷவை நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளால் வெற்றிபெறச் செய்வார்கள் என கூறினார்.