சுட்டுக்கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 13ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நேற்று (10) சாவகச்சேரியில் இடம்பெற்ற ரவிராஜ் நினைவுப் பேருரையின் போது இரண்டு தனிநபர்கள் மற்றும் இணைய நிறுவனம் ஒன்றுக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அரசியல் சட்டம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலுக்கான ரவிராஜ் நிறுவனத்தினால் சமூகத்துக்கான பங்களிப்பை அங்கீரித்து அமரர் ந.ரவிராஜ் ஞாபகார்த்த விருதாக இந்த மூன்று விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அதற்கான சான்றிதழ்களை இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் வழங்கி வைத்திருந்தனர்.

இந்த விருது வழங்கல் நிகழ்வில், முதலாவதாக சிவசிறி விக்னராஜா ஐயர் பாலகுமார குருக்களுக்கு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம், கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை மேற்கோளிட்டு "சைவத் தமிழ் மரபுரிமை காவலுக்கான விருது" வழங்கப்பட்டது.

இரண்டாவதாக தசைத் திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டவரான சுயாதீன ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாசுக்கு முகநூலில் பலரையும் ஒருங்கிணைத்து அநீதிக்கு எதிரான போராட்டங்களை நடத்தியவர் என்பதை மேற்கோள்காட்டி "சமூக ஊடகங்கள் மூலம் ஒருங்கிணைப்பு செயற்பாடு விருது" வழங்கப்பட்டது.

மூன்றாவதாக ஊறுகாய் இணைய ஊடகத்தின் இயக்குனர் நந்தகுமார் சஞ்சை மற்றும் "நந்திக்கடல் பேசுகிறது" நூலின் தொகுப்பாளரான ஊடகவியலாளர் ஜெரா தம்பி ஆகியோருக்கு நந்திக்கடல் பேசுகிறது நூலை வெளியிட்டமைக்காக "போருக்கு பின்னரான ஆவணப்படுத்தல் விருது" வழங்கி வைக்கப்பட்டது.