தீபக் சஹாரின் ஹெட்ரிக் மற்றும் அசத்தலான பந்து வீச்சுக் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு -20 போட்டியில் இந்திய அணி 30 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மூன்று இருபதுக்கு - 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது.

சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடைபெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுக்களினால் வெற்றியும் பெற்றிருந்தது.

இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரை கிண்ணத்தை தீர்மானிக்கும் தொடரின் இறுதிப் போட்டி நாகபூரில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது. 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை குவித்தது.

175 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 30 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

லிட்டன் தாஸ் 9 ஒட்டத்துடனும், மொஹமட் நைம் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 48 பந்துகளில் 10 நான்கு ஓட்டம், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 81 ஒட்டத்துடனும், சவுமிய சர்கார் டக்கவுட்டுடனும், மொஹமட் மிதுன் 27 ஓட்டத்துடனும், முஷ்பிகுர் ரஹிம் டக்கவுட்டுடனும், மாமதுல்லா 8 ஓட்டத்துடனும், அபிப் ஹூசேன் டக்கவுட்டுடனும், ஷபியுல் இஸ்லாம் 4 ஓட்டத்துடனும், முஸ்தபிசுர் ரஹ்மான் ஒரு ஓட்டத்துடனும், அமினுல் இஷ்லாம் 9 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க, அல்அமீன் ஹூசேன் எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் தீபக் சஹார் ஹெட்ரிக் உடன் மொத்தமாக 6 விக்கெட்டுக்களையும், சிவம் டூப் 3 விக்கெட்டுக்களையும், சஹால் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரை 3:2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.