பங்களாதேஷிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியில் ஸரேயஸ் அய்யரின் அதிரடியான ஆட்டத்தினால் இந்திய அணி 174 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மூன்று இருபதுக்கு - 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது.

சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடைபெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுக்களினால் வெற்றியும் பெற்றிருந்தது.

இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரை கிண்ணத்தை தீர்மானிக்கும் தொடரின் இறுதிப் போட்டி நாகபூரில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது. 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா 2 ஓட்டத்துடனும், தவான் 19 ஓட்டத்துடனும், ராகுல் மொத்தமாக 35 பந்துகளை எதிர்கொண்டு 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 52 ஓட்டத்துடனும், ஸ்ரேயஸ் அய்யர் மொத்தமாக 33 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸர்கர், 3 நான்கு ஓட்டம் அடங்கலாக 62 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க மணீஷ் பாண்டே 22 ஓட்டத்துடனும், சிவம் டூப் 9 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் ஷபியுல் இஸ்லாம் மற்றும் சவுமிய சர்கார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், அல்அமீன் ஹூசேன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.