சமஸ்டியை ஒற்றையாட்சிக்குள் சஜித் ஒளித்து வைத்துள்ளார் என சம்மந்தன் கூறுகிறார். பலாப்பழத்திக்குள்ளே மாம்பழ கொட்டை இருக்கிறது என்று தமிழர்களை முட்டாள் ஆக்க சம்பந்தன் கனவு காணுகிறார் என தெரிவித்து வவுனியாவில் இன்று (10.11) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஏ- 9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 995 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினாலேயே இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

995 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபடும் போராட்டதளத்திற்கு முன்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு 2009க்கு முன்பு தமிழ் புலிகளை அழிக்க சிங்களத்திற்கு உதவிய சம்பந்தன் இப்போது 'புலிகளை மௌனிக்கச் செய்ததால் எம்மை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர்' என புலுடா விடுகிறார். 

பாதிரியார் இம்மானுவேல் சர்வதேச அரங்கில் தமிழர்களை பலவீனப்படுத்திய நிலையில், இப்போது தாயகத்தில் மாமனிதர் ரவிராஜின் நினைவு தினத்திற்கு தலைமை தாங்க தகுதி அற்றவர். போன்ற பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மறைந்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் நினைவு தினத்தினை முன்னிட்டு அவரின் படத்திற்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூபி அஞ்சலியும் செய்யப்பட்டது.