நேர்காணல்:- ஆர்.ராம்

அர்த்தபுஷ்டியான அதிகாரப்பகிர்வினை எதிர்பார்த்திருக்கும் தமிழ் மக்கள் கடந்த கால ஜனநாயக ஆட்சியின் அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே மீண்டும் ஒருதடவை இந்த நாட்டில் அராஜக ஆட்சி ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் போது குறிப்பிட்டார். 

அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,

கேள்வி:- ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு கூட்டமைப்பு நிபந்தனையின்றி ஆதரவளிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தமைக்கான காரணம் என்ன?

பதில்:- ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் பல்வேறு விதமான கலந்துரையாடல்களைச் செய்திருந்தோம். பாராளுமன்றக் குழு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆகியவற்றில் இவ்விடயம் சம்பந்தமாக நீண்ட ஆராய்வொன்றைச் செய்தபோது அனைவரும் ஏகமனதாக சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் விடயத்தில் இணக்கப்பாடுகள் காணப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கோத்தாபயவை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தினை யாரும் முன்வைக்கவில்லை. சஜித் பிரேமதாஸவை ஆதரித்தமைக்கும் கோத்தாபயவை ஆதரிக்க முடியாமைக்கான காரணத்தினையும் எமது அறிக்கையில் தெளிவாக கூறியிருக்கின்றோம்.

கேள்வி:- சட்ட அங்கீகாரமற்ற தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு முதன்மைத்துவம் வழங்கி தீர்மானம் எடுத்துள்ளீர்களே?

பதில்:- தேர்தலுக்கு முன்னதாகவே வேட்பாளர்கள் தமது விஞ்ஞாபனத்தினை வெளியிடுகின்றார்கள். ஆகவே தேர்தல் விஞ்ஞாபனம் வேட்பாளர்களின் கொள்கை நிலைப்பாட்டினை பிரதிபலிக்கும் ஆவணமாக கருதுகின்றோம். ஆகவே தேர்தல் விஞ்ஞாபனங்களை உதாசீனம் செய்ய முடியாது. ஆனால் அவர்கள் முன்வைக்கும் கொள்கை நிலைப்பாட்டினை நடைமுறைச்சாத்தியமாக்கும் வகையில் நிறைவேற்றுவது அவர்களின் கண்ணியத்திலேயே தங்கியுள்ளது. எமக்கு கடந்தகாலத்தில் இதுபோன்று பல அனுபவங்களும் இல்லாமில்லை.

கேள்வி:- ரணசிங்க பிரேமதாஸவுடன் நீங்கள் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளின் அடிப்படையில் அவருடைய செயற்பாடுகளுக்கு நிகராக சஜித் பிரேமதாஸவும் எதிர்காலத்தில் செயற்படுவார் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- ரணசிங்க பிரேமதாஸவைப் பொறுத்தவரையில் அவர் இனவாதியல்ல. நாட்டில் உள்ள அனைத்துப் பிரஜைகளும் சமத்துவமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதன் ஊடாக நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டிருந்தார். அவருடைய புதல்வரான சஜித் பிரேமதாஸவும் அவ்விதமான ஒருவர் என்பதை அவருடைய கடந்தகால அரசியல் வாழ்க்கையிலிருந்து உணரமுடிகின்றது. அத்துடன் சஜித் பிரேமதாஸ அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றார். ஆகவே அவருடைய நிலைப்பாடுகள் வரவேற்கக் கூடியதொரு விடயமாகவுள்ளது.

கேள்வி:- எனினும் சஜித் பிரேமதாஸ தேர்தல்; மேடைகளில் ஒற்றை ஆட்சிக்குள்ளேயே இனப்பிரச்சினை தீர்வு, ஜெனீவா தீர்மானத்தினை மீள்பரிசீலனை செய்வேன் என தமிழ் மக்களுக்கு தன்மீது நம்பிக்கை இழக்கும் படியான பல விடயங்களை முன்வைக்கின்றாரே?

பதில்:- சஜித் பிரேமதாஸ தேர்தல் மேடைகளில் கூறுவது பற்றி நான் அறியவில்லை. ஆனால் இனவாத அடிப்படையில் சில தரப்புக்கள் தேர்தலை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்றபோது அதனை எதிர்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. ஓட்டுமொத்தமாகப் பார்கின்றபோது நாம் பிரதான வேட்பாளர்களில் சிறந்தவரென்ற அடிப்படையில் ஒருவரைத் தெரிவு செய்யவேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்.

கேள்வி:- 2015இல் ஜனாதிபதித் தேர்தலின்போது சந்திரிக்காவின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்திருந்த நீங்கள் இம்முறை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையை கருத்திற்கொண்டிருந்தீர்களா?

பதில்:- சந்திரிக்கா மீதோ அல்லது பிரதமர் ரணில் மீதோ எமது நம்பிக்கையை முழுமையாக வைத்திருக்கின்றோம் என்று கூறமாட்டேன். இருப்பினும் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் செயற்பாடுகள் மற்றும் அவர்களின் நிலைப்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொள்கின்றோம். மஹிந்த ராஜபக்ஷவின் ஜனநாயக விரோதமான ஆட்சி உச்ச கட்டத்தில் இருந்தது. 18ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டு நாடு சர்வாதிகாரத்தினை நோக்கி விரைந்து சென்றபோதுதான் நாம் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவினை எடுத்திருந்தோம்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாம் முக்கியமான தீர்மானத்தினை எடுக்க தலைப்பட்டிருந்தோம்.  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். அச்செயற்பாடுகள் இறுதித்தருணத்தினை எட்டிய போதே அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. 13ஆவது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் பிரேமதாஸ, சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் காலங்களில் அதிகாரப்பகிர்வு சம்பந்தமான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக அர்த்தபுஷ்டியானதொரு நிலையை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அக்கருமங்கள் அனைத்தையும் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. இந்த விடயங்களை நாம் நிராகரித்து விடமுடியாது. அதேநேரம் இந்த நாட்டில் ஜனநாயக விரோதமான அராஜக ஆட்சி மீண்டும் உருவாகிவிடக்கூடாது என்பதும் முக்கியமான விடயமாகின்றது. அந்த அடிப்டையில் முடிவெடுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். இந் நிலையில் இவ்வாறு முடிவெடுக்கும் நிலைமையை நாம் தவிர்க்க முடியாது.  

கேள்வி:- இரண்டு பிரதான கட்சிகள் கூட்டிணைந்து ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருந்தபோதும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை பெறமுடியாதுபோயுள்ள நிலையில் எதிர்காலத்தில் அது சாத்தியமென்று கருதுகின்றீர்களா?

பதில்:- அதுபற்றி நாம் வரையறுத்துக் கூறமுடியாதுள்ளது. இருகட்சிகள் ஆட்சியில் அமர்ந்திருந்தாலும் அவற்றுக்கிடையிலான ஒற்றுமை நீண்டிருக்காமை துரதிர்;ஷ்டவசமானது. எல்லா ஆட்சியாளர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அரசியல் தீர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றார்கள். வரலாற்றினை எடுத்துப்பார்கின்றபோது நாட்டின் ஆட்சியில் இருந்தவர்களும், அவர்களது கட்சிகளும் கூறுகின்ற கருத்துக்களில் வேறுபாடுகள் இருக்கவில்லை. ஆனால் அத்தகையவர்களே எதிர்க்கட்சிகளில் இருக்கின்றபோது தமக்கு எதிராக ஆட்சியில் உள்ளவர்களின் செயற்பாடுகளை எதிர்க்கின்ற நிலைமைதான் காணப்படுகின்றது. இந்தப் போக்கில் மாற்றம் அவசியமாகின்றது. அதேநேரம் அதற்குரிய சூழமைவுகளை நாமும் ஏற்படுத்த முயற்சிக்க தலைப்பட்டிருக்கின்றோம்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினைபெறுவதற்கு பிரதான வேட்பாளர்கள் அணுகுமுறைகளைச் செய்திருந்தார்களா?

பதில்:- நாம் சஜித் பிரேமதாஸவை சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தோம். கோத்தாபய ராஜபக்ஷ எம்மை சந்திப்பதற்கு முயற்சித்திருக்கவில்லை. அதற்காக நாம் ஆதங்கப்படவில்லை.

கேள்வி:- எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உங்களுக்கு அழைப்பு விடுத்ததாக கூறுகின்றரே?

பதில்:- ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பின் பின்னர் எனக்கு எந்த விதமான அழைப்பினையும் விடுக்கவில்லை. அவர்கள் எமது நிலைப்பாடுகளை அறிந்திருந்தனர்.

கேள்வி:- புதிய அரசியலமைப்புப் பணிகள் வெற்றியடைய வேண்டும் என்ற காரணத்திற்காக 2015ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவினையும் ஒத்துழைப்புக்களையும் கூட்டமைப்பு வழங்கி வந்தமையானது தமிழினத்தின் பேரம்பேசும் சக்தியை மலினப்படுத்தியுள்ளது என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றதே?

பதில்:- முதலாவதாக ஆட்சியாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கினோம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எமது மக்களின் உரிமைகளை பெறுவதற்காக சாதகமான சூழலை பேணுவதற்காக கொண்டிருந்த நிலைப்பாட்டினை நிபந்தனையற்ற நிலைப்பாடென்று கூறுவதே தவறாகும். நாம் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்று ஆதரவினை வழங்கவில்லை. எமது இலக்குகளை அடைவதற்காகவும் நாட்டின் நலனுக்காகவும் பாராளுமன்ற ஜனநாயகத்தினை காப்பதற்காகவும்தான் எமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தோம். மேலும் ரணில் விக்கிரமசிங்கவினுடைய ஆட்சியில் நூற்றுக்கு ஒருசதவீதம் கூட மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்டமீறல்கள் நடைபெறவில்லை. யாரும் காணாமலாக்கப்படவில்லை. கடத்தப்படவில்லை.

எமது சக பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோரை யார் படுகொலை செய்தார்கள் என்பதற்கு பதிலளிக்க முடியாதிருக்கின்றோம். காணாமலாக்கப்பட்ட மாணவர்கள் உள்ளிட்டவர்களின் குடும்பங்களுக்கு பதிலளிக்க முடியாதுள்ளோம். ஊடகவியலாளர்களை, சாதாரண பொதுமக்களை கொலை செய்தது யார்? இவ்வாறான விடயங்கள் இந்த ஆட்சியில் இடம்பெறாத நிலையில் அந்த ஆட்சிக்கு ஆதரவளிப்பது தவறாகுமா? ஆகவே ஜனநாயக வெளியை ஏற்படுத்தியுள்ள ஆட்சியை தக்கவைப்பதை மனதில் கொள்ளாது செயற்பட முடியாது.

கேள்வி:- தமிழ் மக்களின் அடிப்படை மற்றும் உடனடிப்பிரச்சினை உள்ளடக்கிய 13அம்சக்கோரிக்கைகளை கூட்டமைப்பு உட்பட ஐந்து கட்சிகளும் இணைந்து முன்வைத்திருந்தபோதும் இறுதிவரையில் கூட்டாக செயற்படாது தன்னிச்சையான முடிவை தமிழரசுக்கட்சி உள்ளிட்டவர்கள் எடுத்து விட்டார்களே?

பதில்:- நாங்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கவில்லை. 13அம்சக்கோரிக்கைகளில் கூறப்பட்டுள்ள விடயங்களும், நாம் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானிப்பதற்கு கூறப்பட்டுள்ள காரணங்களும் வேறுபட்டவை அல்ல. தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் செயற்பாட்டில் பிரதிபலிக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டே எமது தீர்மானமும் அமைந்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு இனவாத மேலாதிக்கத்தில் செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் நடைமுறைச்சாத்தியமான கருமங்களை முதன்மைப்படுத்தி அவற்றை முன்னெடுப்பது தான் அரசியலில் விவேகமான செயற்பாடாகும். ஆகவே நிபந்தனைகளை இறுக்கிப்பிடித்துக்கொண்டிருக்காது எமது அடிப்படைக்கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காது தீர்மானங்களை முன்னெடுத்துச் செயற்படுவதே புத்திசாதுரியமான செயற்பாடாகும்.

கேள்வி:- தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்ற நிலையில் தற்போதைய சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் அல்லது தலையீட்டைக் கோருவதன் ஊடாக நிபந்தனையற்ற ஆதரவை தவிர்த்து தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெறுவதற்கான பேரம்பேசலை செய்திருக்க முடியும் என்றொரு உபாயமார்க்கம் முன்மொழியப்படுகின்றமை பற்றி?

பதில்:- இவை கற்பனையில் கூறப்படும் கருமங்களே. நாங்கள் நடைமுறைச்சாத்தியமாக சிந்திக்க வேண்டும். யாரும் கற்பனையில் வாழக்கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால் எமது இலக்கு என்ன? அதனை அடைவதற்கான யதார்த்த வழியென்ன என்றே பார்க்க வேண்டும்.

கேள்வி:- ஐந்து கட்சிகளின் இணைவை முன்னகர்த்தி தமிழர் தேசிய அரசியல் தளத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சியை எடுப்பதற்கான சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளதெனக் கருதுகின்றீர்களா?

பதில்:- ஒற்றுமை முக்கியமான விடயமாகும். ஆனால் ஒற்றுமையுடன் எடுக்கப்படும் முடிவுகள் சாதுரியமாக இருந்தால் சிறப்பானதாக இருக்கும்.

கேள்வி:- சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாறுபட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு மக்கள் ஏமாற்றப்படுவதாக விக்கினேஸ்வரன் கூறி அதனை நிராகரித்திருக்கின்றார் அல்லவா?

பதில்:- அவருடைய கருத்துக்கள் குறித்து நான் பதிலளிக்க விரும்பவில்லை.

கேள்வி:- புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையிலும் அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தையொத்த வார்த்தைப்பிரயோகங்களல்லவா இருக்கின்றது?

பதில்:- வார்த்தைகளை தூக்கிப்;பிடித்துக்கொண்டு நாம் முன்னெடுக்கும் கருமங்களை கிளறினால் அனைத்தும் குழம்பி விடும். ஒற்றையாட்சி என்ற சொல் இல்லை. யுனிற்றரி என்ற சொல்லும் இல்லை. ஆகவே அவ்வாறான சொற்களை தூக்கிப்பிடித்து  சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பினை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. இந்த விடயங்களை  தூக்கிப்பிடித்துக்கொண்டு நிற்பது முட்டாள் தனமானது.

கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் பிரதான அரங்கிலிருந்து இம்முறை தேசிய இனப்பிரச்சினை விடயம் அகற்றப்பட்டு தேசிய பாதுகாப்பு, தேசியவாத, மதவாத விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை எவ்வாறு பார்கின்றீர்கள்?

பதில்:- எமது மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டு நியாயமான அரசியல் தீர்வு இதய சுத்தியுடன் வழங்கப்படும் வரையில் இவ்வாறான சூழல் தொடரும். அதனை ஊக்கப்படுத்தும் வகையில் நாமும் செயற்படக்கூடாது. நாம் சாதூரியமாக நடக்க வேண்டும்.

கேள்வி:- பொறுப்புக்கூறல் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- இவ்விடயம் பற்றி இப்போது பேசமுடியாது. அதற்கான தருணம் இதுவல்ல. தேர்தல் நிறைவடைந்ததும் அதுபற்றி பார்க்கலாம்.

கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சஜித்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறுகின்றீர்கள் மற்றொரு தரப்பினர் வாக்களிப்பினை புறக்கணிக்க கோருகின்றார்கள் பிறிதொரு தரப்பினர் மக்களையே தீர்மானிக்க கூறுகின்றார்கள் இனம் சார்ந்து ஏகோபித்த தீர்மானத்திற்கு தமிழ்த்தரப்பு வரமுடியாதுள்ளமைக்கான காரணம் என்ன?

பதில்:- எமது இனத்திற்கு முற்றிலும் பாதகமான நிலைப்பாடுகளை கொண்டிருக்கக் கூடிய வேட்பாளரை ஆதரிப்பதை விடவும் அவரை தவிர்த்து, முழுமையான திருப்பதி இல்லாது விட்டாலும் கூட எமது விடயத்தில் சாதகமான நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்ற வேட்பாளரை ஆதரிப்பதே சாணக்கியமான செயற்பாடாகும்.

கேள்வி:- வவுனியாவில் உங்களை சந்திக்க வந்த வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் பின்னர் உங்களுக்கு எதிராக குரலெழுப்பியிருந்தனர்? வடக்கு, கிழக்கில் உள்ள போராடிக்கொண்டிருக்கும் உறவுகளின் விடயத்தினை எவ்வாறு கையாளப்போகின்றீர்கள்?

பதில்:- வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்பது தற்போது வரையில் தெரியாதுள்ளது. இவர்களின் விடயங்களை கையாள்வதற்காக காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டு பணியகம் ஆகியன நிறுவப்பட்டுள்ளன. அவற்றின் கருமங்கள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட்டு சிக்கலான இந்த விடயத்திற்கு நியாயமான தீர்வு வழங்க வேண்டும். ஊறவுகளைத் தொலைத்துவிட்டு போராடும் மக்களின் துன்பங்களை சில அரசியல்வாதிகள் தமது அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்துகின்றார்கள். அந்த உறவுகளின் ஆதங்கங்களையும் வேதனையையும் யாரும் அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது. காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நான் பொறுப்பல்ல. அந்த உறவுகளின் பிரச்சினைக்கான தீர்வுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.