(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியின்  அமைச்சரவை உறுப்பினர்கள் தற்போது    பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை அமெரிக்க குடியுரிமையுடன் தொடர்புப்படுத்தி வெளியிடும்  கருத்துக்கள்  முற்றிலும்  பொய்யானது என ஜனாதிபதி  சட்டத்திரணி அலி சப்ரி தெரிவித்தார்.

கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல்  இடம்பெற்ற மறுநாள் அதாவது  17 ஆம் திகதி  காலை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ அமெரிக்கா செல்வதற்கு விமான  பயனசீட்டை பெற்றுள்ளார் என்றும், அவர் இதுவரையில்  அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்யவில்லை, குடியுரிமை இரத்து செய்தவர்களின் பெயர் விபர பட்டியலில் இவரது பெயர்  குறிப்பிடப்படவில்லை என்றும்  குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை  அரசியல்  தேவைகளை கருத்திற் கொண்டதாக காணப்படுகின்றது.

நவம்பர் மாதம் 17 ஆம் திகதி காலை   அமெரிக்கா  செல்வது  தொடர்பான  செய்தியை முதலில் தெளிவுப்படுத்த  வேண்டும். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ  வெளிநாட்டுக்கு  செல்ல வேண்டுமாயின் அதற்கு நீதிமன்றத்தின்  அனுமதி அவசியமாகும். இன்றும் அவர் தொடர்பான  வழக்கு  விசாரணையில் உள்ளதால அவரது பிரயாண கடவுச்சீட்டு நீதிமன்றம் வசம் உள்ளதுடன் பயண தடையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பெற்றுக்கொள்ளப்பட்டதாக வெளியிடப்பட்ட  பயணசீட்டு வழமையாக அவர் பெற்றுக் கொள்ளும் நிறுவனத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது அல்ல மறுபுறம்  பண்டார நாயக்க சர்வதேச விமான  நிலையம் என்று எழுதப்பட்டிருப்பதிலும் எழுத்து பிழைக்ள  காணப்படுகின்றது.  ஆகவே  இந்த குற்றச்சாட்டும் பொய்யானது என்று   நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.