நான் ஒரு விடயத்தைச் சொன்னால் நிச்சயமாக செய்வேன் நான் மற்றவர்கள் போலில்லை என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரித்து சனிக்கிழமை (9) ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன் வாழைச்சேனையிலுள்ள கடதாசி தொழிற்சாலையை ஏராளமானோர் அபிவிருத்தி செய்வதாக குறிப்பிட்டிருந்தார்கள் அதை கேட்டுக்கேட்டு உங்களுக்கு அழுத்துப் போய்விட்டது. நான் மற்றவர்கள் போன்று இல்லை நான் சொன்னால் நிச்சயமாக செய்வேன். ஒருநாளும் நான் முடியாததை கூற மாட்டேன்.

நான் ஜனாதிபதியாக வந்ததும் மூன்று மாத காலப்பகுதிக்குள் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை புனர்நிர்மாணம் செய்து அதில் ஏராளமானோர்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தருவேனென்று உறுதியாகக் கூறுகின்றேன்.

அதேபோன்று ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானம் சர்வதேசத்தில் தரமுயர்ந்த விளையாட்டு மைதானமாக புனர்நிர்மாணம் செய்யப்படும் அத்தோடு வாழைச்சேனை துறைமுகம் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளதோடு கல்குடா தொகுதி முழுவதற்கும் சுத்தமான குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தி, சுகாதாரத்துறையை கட்டியெழுப்பி உங்களுடைய ஆயுள்களை நீடிப்பதற்காக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.

அதேபோன்று தேசிய வேலைத்திட்டம் ஒன்றை பொதுமக்களை மையப்படுத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம். இறைமையை நீக்குவதற்காக நாடளாவிய ரீதியாக சமுர்த்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை விரிவுபடுத்தி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் அன்று வழங்கிய ஜனசவிய திட்டத்தையும் மக்களுக்காக என்னுடைய அரசாங்கத்தில் வேகமாக நடைமுறைப்படுத்துவேன் என்பதனை இவ்விடத்தில் கூறுகின்றேன்.

என்னுடைய தந்தை ரணசிங்க பிரேமதாஸ அவர்கள்தான் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச சீருடை, பகல் போசனம் என்பவற்றை வழங்கி இருந்தார் ஆனால் இப்போது எங்களுடைய பிரதிவாதியாக இருக்கின்றவர்கள் அதனை திருத்தியுள்ளார்கள்.

ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எதிவரும் பதினாறாம் திகதி உங்களுடைய வாக்குகளால் நான் ஜனாதிபதியாக வருகின்றபோது இலங்கையில் இருக்கக் கூடிய நாற்பத்தி நான்கு இலட்சம் சகல மாணவர்களுக்கும் இலவசமாக இரண்டு சீருடை, ஒரு பாதனி, பகல் போசனம் ஆகியவைகள் இலவசமாக வழங்கப்படும்.

இந்தப் பிரதேசத்தைப் பொருத்த வரையிலே பதினைந்து பிரதேச செயலாளர் பிரிவுகள் இருக்கின்றது இந்த பதினைந்து பிரதேச செயலகங்களும் நாடளாவ ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இதன் மூலம் இளைஞர், யுவதிகளுக்கு நிச்சயமாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதையும் நான் கூறுகின்றேன்.

அதேபோன்று நாடளாவிய ரீதியிலே அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் தொழிநுட்பக் கல்லூரிகள் நிறுவப்படும்.

விசேடமாக இந்தப் பிரதேசம் விவசாயத்துறையிலே மிகவும் முன்னணியில் இருக்கின்ற பிரதேசமாக உள்ளது அந்தவகையில் நெல், தேயிலை, இறப்பர், சேனைப் பயிர்ச்செய்கை, சிறு ஏற்றுமதி பயிர்ச்செய்கை இவற்றுக்குத் தேவையான பசலைகளை இலவசமாக என்னுடைய அரசாங்கத்தில் வழங்கி விவசாயத்துறையை மேம்படுத்துவதற்காக அனைத்துத் திட்டங்களையும் எடுப்பேன் என்பதை தெரிவிக்கின்றேன்.

என்னுடைய தந்தையும் நானும் ஒரு சிறந்த பௌத்தன், சிறந்த பௌத்த கொள்கையை பின்பற்றக் கூடியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். இனவாதத்தையோ, மதவாதத்தையோ பௌத்த மதம் போதிக்கவில்லை எல்லோரும் ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும் என்பதைத்தான் பௌத்த மதம் போதித்திருக்கின்றது. அந்தவகையில் இந்த நாட்டில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களை கௌரவமான முறையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை எங்களுடைய அரசாங்காத்தில் நாங்கள் செய்வோம். இனவாதாமில்லாத, மாதவாதமில்லாத அதனைத் துடைத்தெறிந்து மனிதாபிமான சமூதாயத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை என்னுடைய அரசாங்கத்தில் எடுக்கப்படும்.

சில இடத்தில் ஒருசிலர் இருக்கின்றார்கள் பிரதிவாதிகளுக்கு உதவி செய்யக் கூடியவர்கள் அந்தப் பிரதிவாதிகள் எதை உங்களுக்கு கூறுகின்றார்கள் இனவாதத்தை தூண்டுவது, பள்ளிவாசல்களை உடைப்பது, கோயில்களை உடைப்பது, மதஸ்தலங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவது தொடர்பாகத்தான் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

என்னிடத்தில் இல்லாதொழிப்பது, சுட்டெறிப்பது, அழிப்பது என்பது இல்லை. என்னிடத்தில் கட்டியெழுப்புவது, உருவாக்குவது என்பதுதான் உள்ளது.

நிச்சயமாக பதினாறாம் திகதி உருவாக்கப்போவது வடக்கென்ன, கிழக்கென்ன ஒன்பது மாகாணங்கள், இருபத்தைந்து மாவட்டங்களை பிரதிநிதுத்துவப்படுத்திய ஒரு சிறந்த இலங்கையை கட்டியெழுப்பக் கூடிய ஒரு சூழல் எதிர்வரக்கூடிய பதினாறாம் திகதி உருவாகும் என்பதை இந்த இடத்திலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக நியமித்து அனைவருக்குமான பாதுகாப்பு ஒழுங்குகளை சிறந்த முறையில் நடைமுறைப் படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வோம். மது, போதவஸ்து என்பவற்றை இந்த நாட்டிலிருந்து இல்லாதொழிப்போம். கொள்ளை, கொலை காரர்களை இந்த நாட்டிலிருந்து இல்லாதொழிப்போம். சிறுவர் துஸ்பிரயோகத்தை இந்த நாட்டிலிருந்து இல்லாதொழிப்போம். இனவாதம், மதவாதம் என்பவற்றை இல்லாதொழிப்போம்.

அதேபோன்று ஒருமித்த இந்த இலங்கை நாட்டிலே அதிகபட்ச அதிகாரப் பகிர்வினை வழங்கி அனைவருக்கும் இறைமை, ஒற்றுமை எனும் விடயத்தை வழங்கி ஒரு தாய் மக்களாக அனைத்து மக்களையும் வழிநடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வேன் என்றார்.