(நா.தனுஜா)

கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இன்று சனிக்கிழமை சுமார் அரை மணித்தியாலம் வரை மின்சார செயலிழப்பு ஏற்பட்டதுடன், அதற்காக விமானநிலையம் மற்றும் விமானப்போக்குவரத்து சேவைகள் நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியிருக்கிறது.

விமானநிலையத்தில் மின்சார செயலிழப்பு ஏற்பட்டதையடுத்து, விமானநிலையம் மற்றும் விமானப்போக்குவரத்து சேவைகள் ஊழியர்கள் விரைந்து செயற்பட்டு மின்சார கோளாறு ஏற்பட்டுள்ள பகுதியை சரியாக அடையாளங்கண்டு கொண்டதைத் தொடர்ந்து, அச்சிக்கல் சரிசெய்யப்பட்டது.

இதனால் சுமார் 28 நிமிடங்கள் வரை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் இருண்டிருந்தது. விமான நிலையத்தின் மத்திய மின்சாரக் கட்டமைப்பில் 30 வருடங்களுக்கு முன்னர் பொருத்தப்பட்ட உயர் மின்வழங்கல் கம்பியில் ஏற்பட்ட கோளாறின் விளைவாகவே மின்சார செயலிழப்பு ஏற்பட்டதாக விமானநிலையம் மற்றும் விமானப்போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சஞ்சீவ விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

 அத்தோடு இம்மின்சார செயலிழப்பின் காரணமாக அசௌகரியங்களை எதிர்கொள்ள நேர்ந்த பயணிகள் மற்றும் விமானநிலையத்தைப் பயன்படுத்துவோரிடம் மன்னிப்பையும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.