புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (08.11.2019) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதூங்க உரையாற்றிக்கொண்டிருக்கும் போது அங்கு கூடிநின்ற சிலர் அறுவக்காலு குப்பை விவகாரம் சம்பந்தமாக கேள்வி கேட்டபோது அங்கு பதற்ற நிலை உருவானது.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (08.11.2019) மாலை தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இடம்பெற்றது.

இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதூங்க, ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், மூத்த உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, ஐக்கிய தேசியக்கட்சி புத்தளம் அமைப்பாளர் எம்.என்.எம்.நஸ்மி உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, நிகழ்வில் இறுதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க உரையாற்றிக்கொண்டிருந்த போது, புத்தளம் அறுவக்காலு குப்பைத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்ற 'க்ளீன் புத்தளம்' அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் புத்தளம் மக்கள் எதிர்நோக்கி வரும் குப்பைத் திட்டம் தொடர்பில் உறுதியான பதிலை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.

குப்பைத்திட்டம் தொடர்பில் ஒரு உறுதியான முடிவை எமக்கு வழங்கினால் நாம் முழுமையான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கி அவருடைய வெற்றிக்காக பாடுபடுவோம் என்றும் அவ்வாறு யாரும் வாக்குறுதி வழங்காவிட்டால் இந்த தேர்தலில் யாருக்குமே வாக்களிக்க மாட்டோம் எனவும் இதன்போது அவர்கள் குறிப்பிட்டனர்.

இதன்போது, குறித்த திட்டம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் இதற்கான உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.

எனினும், முன்னாள் ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கு க்ளீன் புத்தளம் உறுப்பினர்கள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனால் அங்கு சில நிமிடங்கள் பதற்றமானதொரு சூழ்நிலை காணப்பட்டது.

குப்பைத் திட்டத்தினால் புத்தளம் மக்கள் கடும் பாதிப்பை தொடர்ந்தும் அனுபவித்து வருவதாகவும், தேர்தல் பிரச்சாரங்களுக்கு வருகை தரும் அரசியல்வாதிகள் இந்த குப்பை பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லை என்றும் தங்களது கடும் விசனத்தை தெரிவித்த க்ளீன் புத்தளம் உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் கொழும்பு குப்பைத்திட்டத்திற்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

இந்த விவகாரம் தொடர்பில் க்ளீன் புத்தளம் அமைப்பினரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, புத்தளம் கரைத்தீவு பிரதேசத்திற்கு வருகை தரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை சந்தித்து பேசுவதற்கு பத்து நிமிடங்கள் நேரத்தை ஒதுக்கித் தருவதாகவும், அதற்காக இருவரை மாத்திரம் அனுமதிப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் வழங்கிய வாக்குறுதிகள் இறுதி நேரத்தில் மறுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி அவசரமாக செல்ல இருப்பதால் அவரை க்ளீன் புத்தளம் அமைப்பினர் சந்திப்பதற்கு நேரத்தை ஒதுக்கித்தர முடியவில்லை எனவும், மேடையில் அமர்ர்ந்திருக்கும் போது பேசுவதற்கு சந்தர்ப்பத்தை பெற்றுத் தருவதாகவும் ஏற்பாட்டாளர்களினால் வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையிலேயே அதுவும் இறுதி நேரத்தில் இல்லாமல் செய்யப்பட்டதுமே தாங்கள் இவ்வாறு அவர் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது இடையில் குறுக்கிட்டு பேசியதாக் அவர்கள் குறிப்பிட்டனர்.