ஜானதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் முகங்கள் மாறுபட்டிருக்கின்றனவே தவிர அவர்களின் கொள்கைகள் ஒன்றாகவே இருக்கின்றது என ஐக்கிய சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜெயசூரிய தெரிவித்துள்ளதுடன் இவர்கள்  அரசியல் தீர்வு குறித்து தெளிவாக எதனையுமே குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்தார்.

எமது கட்சியே பல்கலைக்கழக மாணவர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள 13 அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் தமிழ் மக்கள் எமது கட்சியின் சின்னமான முச்சக்கர வண்டிக்கு வாக்களித்து ஆதரவு வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி யார் எண்பது குறித்து தீர்மானிக்கும் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இவ்வாறான நிலையில் இரு பிரதான வேட்பாளர்களுக்கே ஊடகங்களில் முன்னிலை கொடுக்கபடுகின்றது. இந்த இரு வேட்பாளர்களுமான சஜித்,கோத்தாபய ஆகியோரின் கொள்கைகள் ஒன்றாகவே காணப்படுகின்றன. உலக வங்கி,சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றில் உடன்படிக்கை செய்து கடன் பெறுவது உள்ளிட்ட மற்றும் விடயங்களிலும் செயற்பாடுகளும் ஒன்றாகவே உள்ளன. இருவரதும் முகங்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளன.கொள்கைகள் ஒன்றாகவே உள்ளன.

இந்த இரு வேட்பாளர்களும் நாட்டில் முக்கிய பிரச்சனையாக காணப்படும் அரசியல் தீர்வு குறித்து எதனையும் தேர்தல் விஞ்ஞாபணங்களில் தெளிவாக குறிப்பிடவில்லை. இவர்கள் வடக்கில் ஓர் கதையும் தெற்கில் ஓர் கதையும் கூறுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில் பொதுஜன பெரமுனவினர் தெற்கில் அதனை வைத்து நாடு பிளவு படப் போவதாக பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். ஒட்டுமொத்தத்தில் என்னைத் தவிர 34 வேட்பாளர்களுமே பௌத்த சிங்கள வாதத்தின் வாக்குகளை பெறுவதிலேயே குறியாகவுள்ளனர். சிறுபான்மை மக்கள குறித்து இவர்கள் சிந்திப்பதாக இல்லை.

13 அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை உள்ளது என கூறிவரும் கட்சி எமது கட்சி மட்டுமே. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் முச்சக்கரவண்டிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.