நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியில் 15 பல்கலைக்கழகங்களின் 794 வங்கிக் கணக்குகளில் 5,666 மில்லியன் ரூபா நிதி எஞ்சியிருப்பதாக 2017ஆம் ஆண்டு கணக்காய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் மூலதன ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் உரிய பணிகளுக்கு அவை ஈடுபடுத்தப்படாமல் செலவு செய்யப்படாத ஒதுக்கீடுகளாக தக்கவைத்துக் கொள்ளப்பட்டிருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய 2017.12.31ஆம் திகதியில் செலவு செய்யப்படாது தக்கவைத்திருந்த பணத்தொகையின் பெறுமதி 1,414 மில்லியன் ரூபா எனவும் அறியப்பட்டுள்ளது. 

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை நேற்றையதினம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்த அறிக்கையில் பல்கலைக்கழகங்களில் காணப்படும் குறைபாடுகள் பல புலப்பட்டுள்ளன. திட்டவட்டமான மதிப்பீடு மேற்கொள்ளப்படாமல் உத்தேச மதிப்பீடுகளை தயாரித்தலும், ஆய்வுகளை நடைமுறைப்டுத்தல், ஆய்வு மற்றும் வெளியீடுகளை சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளுக்கு சமர்ப்பித்தல் ஆகியவற்றுக்கு கல்விசார் பணியாட்தொகுதியின் கவனத்தை செலுத்த வைக்கின்றமை போதுமானதாக அமையாத காரணத்தினால் வருடாந்தம் திறைசேரியினால் வழங்கப்பட்டிருந்த மூலதன ஒதுக்கீடுகள் முறையாகப் பயன்படுத்தப்படாதிருந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் இவ்வாறு வங்கிக் கணக்குகளில் நிதியைப் பேணுவதற்குப் பதிலாக, திறைசேரியினால் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியினைக் குறைப்பதன் ஊடாக தனிநபரின் கடன்சுமையைக் குறைக்க முடியும் என்றும் கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.