நியூஸிலாந்துக்கு எதிரான 4 ஆவது சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 76 ஓட்டங்களினால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று வரும் இருபதுக்கு - 20 தொடரில் நியூஸிலாந்து அணி 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந் நிலையித் இருபதுக்கு -20 தொடரின் நான்காவது போட்டி நேப்பியரில் இன்று இடம்பெற்றது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் முதல் இரண்டு விக்கெட்டுக்களும் 7.2 ஓவரில் 58 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டாலும் (டொம் பென்டன் 31, ஜோனி பெயர்ஸ்டோ 8) அதன் பின்னர் 3 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் மற்றும் அணித் தலைவர் இயன் மோர்கன் இருவரும் இணைந்து நியூஸிலந்துக்கு மரண பயத்தை காட்டினர். 

நியூஸிலாந்து அணியினரின் பந்து வீச்சுக்களையும் அனைத்து திசைகளிலும் அடித்தாடிய இவர்கள் 182 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுக் கொண்டனர்.

டேவிட் மாலன் 51 பந்துகளில் 9 நான்கு ஓட்டங்கள் 6 சிக்ஸர்கள் அடங்கலாக 103 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார். இயன் மோர்கன் மொத்தமாக 41 பந்துகள‍ை எதிர்கொண்டு 7 சிக்ஸர்கள், 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 91 ஓட்டங்களை பெற்று டிம் சவுதியினுடைய பந்து வீச்சில் 19.4 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை குவித்தது. 242 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த‍ நியூஸிலாந்து அணி 16.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 76 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது. 

நியூஸிலாந்து அணி சார்பில் கொலின் முன்ரோ 30 ஓட்டங்களையும், டிம் சவுதி 39 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் மெத்தியூ பெர்கின்சன் 4 விக்கெட்டுக்களையும், கிறிஸ் ஜோர்தன் 2 விக்கெட்டுக்களையும் சாம் கர்ரன், டோம் கர்ரன், பேட்ரிக் பிரவுன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

இப் போட்டியின் ஆட்டநாயகனாக டேவிட் மலன் தேர்வுசெய்யப்பட்டதுடன், இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரினை இங்கிலாந்து அணி 2:2 என்ற கணக்கில் சமனிலை செய்துள்ளது.