(செ.தேன்மொழி)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி தோல்வியின் விழிம்பில் இருந்துக்கொண்டு பொய்யான பிரச்சாரங்களை பரப்பிவருகின்றது என்று தெரிவித்த கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஐ.தே.க வினர் முறைக்கேடான தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

பத்தரமுல்ல - நெழும்மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 

பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர்  நாட்டில் குண்டுதாக்குதல் ஒன்றை மேற்கொண்டு மக்களின் வாக்குகளை தம்வசம் படுத்துவதற்காக திட்டமொன்றை தீட்டி யுள்ளனர் என்று டுவிட்டர் தளத்தினூடாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களான அஜித் பி பெரேராவும், ஹரின் பெர்ணான்டோவும் தமக்கு தெரிவித்ததாக அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தேர்தல் ஆணையகத்தில் முறைபாடொன்றை அளித்துள்ளார்.

ஐ.தே.க தனது தோல்விக்கு பயந்தே இவ்வாறான போலி பிரச்சாரங்களை பரப்பி வருகின்றது. எமது வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

மக்கள் மத்தியில் பதற்ற நிலைமையை ஏற்படுத்திதான் வாக்குகளை பெறவேண்டும் என்ற நிலைமை எமக்கில்லை. மக்கள் எம்மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்களின் நம்பிக்கையிலேயே எமது வெற்றி தங்கியுள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

அவர்களுக்கு இது போன்ற தகவல்கள் கிடைக்கப் பெற்றால் அதனை பொலிஸாரிடமே தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து தேர்தல் ஆணையகத்தில் தெரிவித்து பொய்யான பிரச்சாரங்களை முன்னெத்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அண்மையில் வடக்கிற்குச் சென்றபோது அந்த மக்களின் வாக்குகளை பெறுவதற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விடுதலை புலியினரை விடுதலை செய்வதாகவும் , ஏற்கனவே சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களை பொது மன்னிப்பில் விடுதலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் நிலைப்பாட்டை அறிய நாங்கள் விரும்புகின்றோம். இந்த விடயம் தொடர்பான அவரது அபிப்ராயத்தை அவர் நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் அரசியல் இலாபத்திற்காக இவர்கள் நிர்மாணப்பணிகள் முழுமைப் பெறாத அதிவேக நெடுஞ்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனால் அந்த வீதிகளில் பயணிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் கூட அக்கறை கொள்ளது , தங்களது சுயலாபத்திற்காக செயற்பட்டு வருகின்றனர்.

எமது வேட்பாளர் கோத்தாபயவின் பிரஜாவுரிமை தொடர்பில் மீண்டும்  பேச்சுகளை எடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றம் தனது நிலைப்பாடை அறிவித்துள்ள நிலையில் மக்களை ஏமாற்றுவதற்காகவே இவர்கள் இவ்வாறான பிரச்சரங்களை வெளியிடுகின்றனர் என அவர் இதன்போது தெரிவித்தார்.