நடிகை அனுஷ்கா நடித்திருக்கும் ‘நிசப்தம்’ படத்தின் டீசர் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று, ட்ரெண்டிங்காகி வருகிறது.

‘பாகுபலி’ படத்திற்கு பிறகு நடிகை அனுஷ்கா நடித்து வரும் திரைப்படம் ‘நிசப்தம்’. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே தருணத்தில் தயாராகிவருகிறது. இதனை ஹேமந்த் மதுகர் இயக்கிவருகிறார்.

இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே, ஹொலிவுட் நடிகர் மைக்கேல் மட்சன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஷாநீல் தியோ ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் டீசர், நடிகை அனுஷ்காவின் 38வது பிறந்த நாளான நேற்று வெளியானது.

இணையத்தில் வெளியான 24 மணி நேரத்திற்குள் ஐந்து மில்லியன் பார்வைகளை பெற்று, ‘நிசப்தம்’ படத்தின் டீசர் சாதனை செய்திருக்கிறது. இதனை அனுஷ்காவின் ரசிகர்கள் ட்ரெண்டிங்காக்கி வருகிறார்கள்.

இதில் அனுஷ்கா, சாக்ஷி என்ற கதாபாத்திரத்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகிவரும் இந்த படம் அடுத்த மாதம் வெளியாக கூடும் என தெரிய வருகிறது.