( மயூரன் )

மாமியாரின்  ஏ.டி.எம். அட்டையை திருடிய மருமகளை ஒரு நாள் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் பொ.சிவகுமார் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

பருத்தித்துறை தும்பளை பகுதியை சேர்ந்த பெண்ணே  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , 

கணவனின் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி அங்கு மாமியாரின் (கணவனின் தாயாரின்) கைப்பைக்குள் இருந்த  ஏ.டி.எம். அட்டையை திருடிக்கொண்டு பையினுள் இருந்த டயரியில் குறிக்கப்பட்டிருந்த இரகசிய குறியீட்டு இலக்கத்தையும் குறித்துக் கொண்டு சென்றுள்ளார்.

மாமியாரின் ஏ.டி.எம். அட்டையை  களவாடிச் சென்ற மருமகள் பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவில் உள்ள ஏ.டி.எம்.இயந்திரங்கள் மூலம் ஒரு இலட்சத்து 89 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துள்ளார்.

தனது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டமையை வங்கியின் ஊடாக அறிந்த மாமியார் அது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் ஏ.டி.எம்.அட்டையை திருடி பணத்தை திருடியது மருமகள் தான் என தெரியவந்ததை அடுத்து மருமகளை பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைதின் பின்னர் தான் மருமகளுடன் சமரசமாக செல்வதாக  மாமியார் தெரிவித்த போதும், பொலிசார் தாம் கைது செய்த மருமகளை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இதனை தொடர்ந்து குறித்த பெண்ணை நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.