பல சிக்கல்களில் சிக்கும் மேற்கிந்திய அணியின் துடுப்பாட்ட வீரரும் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வீரருமான கிறிஸ்கெய்லுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. 

பிரித்தானிய நாளிதழான ‘த டைம்ஸ்’  நாளிதழின் பெண் செய்தியாளர் சார்லோட்டே எட்வர்ட்ஸிடம் சர்ச்சையான முறையில் கெய்ல் பேசியதையடுத்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

குறித்த ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு “என்னிடம் இருப்பது அளவில் மிகப்பெரிய துடுப்புமட்டை, அது உலகிலேயே அது பெரியது” என கெய்ல் பதிலளித்துள்ளார்.

ஆனால் கெய்ல் எதோ வேறு அர்த்தத்தில் தெரிவித்ததாக குறித்த பெண் ஊடகவியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வீரர் கிறிஸ் கெய்லுக்கு மற்றுமொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பிக் பாஷ் இருபதுக்கு - 20 தொடரின்போது, பெண் பத்திரிகையாளரிடம் சர்ச்சைக்குரிய முறையில் பேசி கெய்ல் சர்ச்சையில் சிக்கினார்.

இதனால், மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி கெய்ல் உடனான ஒப்பந்தத்தை நீடிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில்  ஐ.பி.எல் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு, வீரர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்வது அவசியம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பி.சி.சி.ஐ. தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவுள்ளதாகவும், இதுதொடர்பாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி நிர்வாகத்திடமும் விளக்கம் கோரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.