(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரு தாய் பிள்ளைகளாகும். ஜனாதிபதித் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு 71 வீத வாக்கினைப் பெற்று கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்தோடு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த சம்பளத்தையும், மேலதிக தீபாவளி முற்பணத்தை பெற்றுக் கொடுக்க முடியாத அரசாங்கம், 1500 ரூபா நாளாந்த சம்பளத்தைப்  பெற்றுக் கொடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றுவ தாகவும் குற்றஞ்சுமத்தினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கேகாலை மாவட் டத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட் டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் ,

சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரே கூட்டணியில் இணைந்திருக்கிறது. இவ்விரு கட்சிகளும் ஒரு தாய், பிள்ளை மக்களாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்க்கட்சி பலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்மிடம் வழங்கினார்.

சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க தீர்மானித்தது. எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு கட்சியொன்றை உருவாக்கினோம். அந்த கட்சியூடாக போட்டியிட்டு உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றோம்.  உள்ளூராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுன, சுதந்திர கட்சி தனித்தனியே போட்டியிட்டன. அதே எல்பிட்டி தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டோம். எனினும் இருகட்சிகளினதும் முடிவை இணைத்த போது 70 வீத வாக்கினைப் பெற்று பாரிய வெற்றி பெற்றுள்ளோம். எனவே இரு கட்சிகளும் இணைந்து கோத்தாபய ராஜபக்ஷவை நிச்சயம் வெற்றி பெற வைக்கும்.

தற்போது அரசாங்கம் அனைவரிடமும் போலியாக செயற்படுகின்றது. பெருந்தோட் டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபா நாளாந்த சம்பளமாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. நாளாந்த சம்பளமாக 1000 ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாத , மேலதிக தீபாவளி முற்பணத்தை வழங்க முடியாத அரசாங்கம் எவ்வாறு நாளாந்த சம்பளத்தை அதிகரிக்கும் ?

நாட்டை பிளவுபடுத்தும் யோசனைகளை முன்வைத்திருக்கிறார்கள். சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் சிங்கள மொழியிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழியிலும் வெவ்வேறு அர்த்தங்களில் காணப்படுகிறது. சிங்கள மொழியில் 'ஏக்கிய' என்று கூறி சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு சிங்கள, தமிழ் மக்களை ஏமாற்ற சஜித் பிரேமதாச வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருக்கிறார். எனினும் தற்போது மக்களை ஏமாற்ற முடியாது. நாட்டை பிளவுபடுத்துவதற்கு இடமளிக்காது ஒற்றுமையை பேணுவதற்கு நாம் பாடுபடுவோம் என்றார்.