யாசகத்தில் ஈடுபட்ட மூதாட்டியிடமிருந்து இலட்சக்கணக்கில் பணம், தங்க நகைகள் மீட்பு !

By Daya

08 Nov, 2019 | 11:00 AM
image

யாசகம் செய்து வந்த மூதாட்டியிடம், சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாவும் (இந்திய ரூபாக்கள்), தங்க நகைகளும் இருந்தது பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று அண்மையில் புதுச்சேரியில் இடம்பெற்றுள்ளது. 

புதுச்சேரி காந்தி வீதியில், திரிபுர சுந்தரி சமேத வேதபுரீஸ்வரா் கோயிலை சுற்றியுள்ள சில கடைகளைச் சுத்தம் செய்யும் பணியில் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குத் தங்கியிருந்த ஒரு மூதாட்டியை வேறு இடத்துக்குச் செல்லுமாறு கூறி, அவர் வைத்திருந்த பை உள்ளிட்டவற்றைக் கோயில் பணியாளர்கள் எடுத்து வீசினர்.

அந்தப் பகுதியிலிருந்த முச்சக்கரவண்டி சாரதிகள்  மற்றும் பொதுமக்கள் சிலர் அந்த மூதாட்டிக்கு ஆதரவாகப் பேசி, குறித்த மூதாட்டியின்  பையை எடுத்து பாா்த்தபோது, அதில் நாணயத்தாள்கள், தங்கக் கம்மல், 2 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதியப் புத்தகம் ஆகியவை இருந்ததைக் கண்டனர்.

இதுகுறித்து, பெரிய கடை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த  பையிலிருந்த ஆவணங்கள் மற்றும் நாணயத்தாள்களை  சோதனை செய்தனர்.

பைக்குள், 14 ஆயிரமும், ஒரு பவுண் தங்கக் கம்மலும், சில்லறைக் காசுகளும் இருந்தன. ஒரு வங்கிக் கணக்கில்  68 ஆயிரமும், மற்றொரு வங்கிக் கணக்கில்  36 ஆயிரமும் குறித்த மூதாட்டி சேமித்து வைத்திருந்தமை தெரியவந்தள்ளது. 

பொலிஸார் நடத்திய விசாரணையில், குறித்த மூதாட்டி புதுச்சேரி புதுசாரம் வெங்கடேஷ்வரா நகா் அவ்வை வீதியைச் சேர்ந்த ரமணன் மனைவி பா்வதம் என்பது தெரிய வந்தது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்து குடியேறியதும், கணவர் இறந்த பின்பு உறவினர்கள் கைவிட்டதால், வேதபுரீஸ்வரா் கோயில் பகுதியில் யாசகம் செய்து பணத்தை வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பொலிஸார் மூதாட்டி பா்வதத்தை புதுச்சேரியில் உள்ள காப்பகம் ஒன்றில் ஒப்படைத்தமை  குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right