ரோகித் சர்மா மற்றும் தவானின் அதிரடியான இணைப்பாட்டம் காரணமாக பகளாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்று பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மூன்று இருபதுக்கு - 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது.

சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடைபெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று தொடரில் 1:3 என்ற கணக்கில் முன்ன்லையிலிருந்தது.

இந் நிலையில‍ை தொடரின் இரண்டாவது போட்டி இன்று மாலை 7.00 மணிக்கு ராஜ்கோட்டில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது.

154 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணிக்கு ரோகித் சர்மாவும், தவானும் நல்லதொரு இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுத்தனர். 

எனினும் ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுணையில் அவருக்கு வலுச் சேர்த்து வந்த தாவன் 10.5 ஆவது ஓவரில் 31 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, 12.2 ஆவது ஓவரில் ரோகித் சர்மா மொத்தமாக 43 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டங்கள், 6 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 85 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் 3 ஆவது விக்கெட்டுக்காக ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஜோடி சேர்ந்தாட இந்திய அணி 15.4 ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் பங்களாதேஷ் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது. ராகுல் 8 ஓட்டத்துடனும், ஸ்ரேயஸ் அய்யர் 24 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரை 1:1 என்ற கணக்கில் சமப்படுத்தியுள்ளதுடன் இப் போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.