செ.தேன்மொழி)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தை விட தற்போது நாட்டில் கடன் அதிகரித்துள்ள நிலையில் பொருளாதாரத்திலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிப்பெற்றால் தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றும் குறிப்பிட்டார்.

கொள்ளுப்பிட்டி ரமடா ஹோட்டலில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 

நாம் எம்.சி.சி ஷோபா ஒப்பந்தங்கள் தொடர்பிலே அதிகம் பேசி வருகின்றோம். ஆனால் நாம் பார்க்க வேண்டிய இன்னுமொரு பகுதிதான் இந்த சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாகவரும் பிரச்சினைகள்.

மத்தியவங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசாமி அண்மையில் ஊடகசந்திப் ஒன்றின் போது 'எமது நாட்டு பொருளாதாரத்தின் சுயாதிபத்தியத்தின் பெரும் பகுதியை சர்வதேச நாணய நிதியத்திற்கு கையளித்து வருகின்றோம்' என்று தெரிவித்தார்.இது பெரும் பயங்கரமான கருத்து வெளியீடாகும்.

எமது பொருளாதாரம் நடவடிக்கைகள் இன்னொருவருக்கு அடிமையானால் அதனால் நாட்டிக்கு என்னபயன் கிடைக்கப்போகின்றது? 

நாட்டின் பொருளாதார நடவடிக்கையை பெரிதும் பாதிப்படைய செய்வதுதான் மிச்சம். ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி. சர்வதே நாணய நிதியத்தில் நாங்களும் கடன் பெற்றோம் அப்போது எமது ரூபாவின் பெறுமதியை கட்டுபடுத்துமாறு அவர்கள் எமக்கு கூறினார். 

ஆனால் நாங்கள் அவர்கள் சொல்வதற்கு இணங்கவில்லை. எங்களுக்கு நீங்கள் கடனை தாருங்கள் நாட்டின் செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்றோம்.

அவர்கள் சொல்வதற்கெல்லாம் தற்போதைய அரசாங்கம் இணக்கம் தெரிவித்தனாலேயே எம்நாட்டு பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதனால் எமது கடன் தொகைக்கு 1163 பில்லியன் ரூபாய் சேர்ந்துள்ளது. எமது நாட்டு பொருளாதார நடவடிக்கைகளை முன்னேற்றுவதென்றால்  நாட்டிற்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையிலேயே நாம் முன்னேற்ற வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.