(ஆர்.யசி, எம்.ஆர். எம்.வசீம்)

எந்தவொரு சூதாட்டத்தில் ஈடுபடும் எந்தவொரு நபரும் இனிமேல்  விளையாட்டுதுறையில் எந்த பதவியும் வகிக்க முடியாது. இன்றில் இருந்து இது நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அதிரடி அறிவிப்பை விடுத்தார். 

விளையாட்டுத்துறையில் இன்று பாரியளவில் ஊழல் நிறைந்துவிட்டது. இவற்றை தடுக்க தற்போது இருக்கும் சட்டத்தை மாற்றி பலமான சட்டமொன்றை கொண்டுவர தீர்மானம் எடுத்தும் கடந்த காலங்களில் அதற்கான தடைகள் அதிகமாக இருந்தது. ஊழல், சூதாட்டம் என்பவற்றில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு 100 மில்லியன் தண்டமும் 10 ஆண்டுகள் சிறையும் வழங்க வேண்டும் என்ற  விளையாட்டுத்துறை சார் புதிய சட்டத்தை நாம் கொண்டுவந்துள்ளோம். 

எனினும் இதில் ஒரு சிலர் தலையிட்டு சட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கின்றனர். இதில் முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவை காப்பாற்ற எடுக்கும் முயற்சியா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. இது குறித்து ஆராய விசாரணைகளை நடத்த வேண்டும். 

அதேபோல் கடந்த காலங்களில் ஊழல் இடம்பெற்றதா என்பது குறித்து எனக்கு எதுவும் கூற முடியாது. ஆனால் அண்மைக்காலமாக இடம்பெற்ற ஊழல் மற்றும் இனியும் ஊழல் இடம்பெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. 

பாராளுமன்றத்தில் இன்று விளையாட்டு துறை  ஒழுங்குவிதிகள் மீதான  விவாதத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறினார்.