பதுளை மாவட்ட பெருந்தோட்டப் பகுதியில் பரீட்சார்த்த ரீதியில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் போது 848 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லாதிருப்பது தெரியவந்துள்ளது.

பதுளை மாவட்ட பெருந்தோட்ட மட்டத் தலைவர்கள் ஒன்றியம் பதுளை மாவட்டத்தின் 22 பெருந்தோட்டங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயேமேற்படி தேசிய அடையாள அட்டைகள் இல்லாமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பதுளை – 128, பேர் ஹாலி-எலை – 195 பேர், எல்ல – 28 பேர், பண்டாரவளை – 48 பேர், வெலிமடை – 106 பேர், அப்புத்தளை – 183 பேர்,அட்டாம்பிட்டிய – 50 பேர், வியலுவ – 56 பேர், ஹல்துமுள்ளை – 54 பேர் என்ற வகையில் 848 பேருக்கு, தேசிய அடையாள அட்டைகள் இல்லாதுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 22 பெருந்தோட்டங்களை உள்ளடக்கியே மேற்படி ஆய்வு இடம்பெற்றது. அத்துடன் இவ் ஆய்வில் தேசிய அடையாள அட்டையின் முக்கியத்துவத்தினை பெருந்தோட்ட மக்கள் இன்னும் உணராமலிருந்து வருவதும் தெரியவந்துள்ளது.

நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியுடன் தற்காலிக அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தினை எமது ஒன்றியம் முன்னெடுக்குமென்றும் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வு ஏனைய பெருந்தோட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படுமென்றும் ஒன்றியத் தலைவர் எஸ். லோகேஸ்வரன் தெரிவித்தார்.