(எம்.மனோசித்ரா)

ரத்கம மற்றும் கொடவில ஆகிய பிரதேசங்களில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

 

கொடவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ பிரதேசத்தில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது , உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி மற்றும் டி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 3 துப்பாக்கி ரவைகள் என்பவற்றை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 36 வயதுடைய பெத்தகோனவில - மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். கொடவீல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இதே போன்று ரத்கம பிரதேசத்தில் நேற்றிரவு 8.45 மணியளவில் கடுதம்பே பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ரத்கம - கடுதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.