(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவத்தில், கடத்தப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருமலை கடற்படை முகாமின் கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை முகாம்  நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை பூரணமாக விஷேட வைத்திய பகுப்பாய்வுக் குழுவினரால் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.  

இதற்கான அனுமதியை கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க சி.ஐ.டி.எனும் குற்றப் புலனயவுப் பிரிவுக்கு இன்றுவழங்கினார். 

அத்துடன் இந்த பகுப்பாய்வு நடவடிக்கைகளின் போது  பகுப்பாய்வு வைத்திய குழுவுக்கு மேலதிகமாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும்  பொலிஸ் ஸ்தல பகுப்பாய்வுப் பிரிவினரும் குறித்த நடவடிக்கைகளின் போது உதவ நீதிவான் அனுமதியளித்தார்.

கன்சைட் எனும் குறித்த வதை முகாமில் கடத்தப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அங்கு  அப்போது கடமையாற்றிய லெப்டினன் கொமாண்டர் வெலகெதர, பொலித்தீன் உரைகளில் சுற்றப்பட்ட சடலங்களை கெப் ரக வாகனம் ஒன்றில் ஏற்றுவதை தான் கண்டதாக சுட்டிக்காட்டி அளித்த வாக்கு மூலம் மற்றும், கடத்தப்பட்டோரில் அடங்கும் ரஜீவ் நாகநாதன்  தனது தயாருக்கு  தொலைபேசியில்  கூறிய அவ்விடத்தில் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடையிலான இளைஞர் யுவதிகள் அழைத்து வரப்பட்டு சுட்டுக் கொல்லப்படுவதான் தகவல் தொடர்பிலும் அறிவியல் சான்றுகளை கண்டறியும் நோக்கில் இந்த வைத்திய பகுப்பாய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.