இலங்கை அரசாங்கத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதை தடை செய்து இடைக்கால தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட  இரண்டு மனுக்கள் இன்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அகுனுகல்லே ஜினாநந்த தேரர் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஆகியோரினால் குறித்த மனுக்கள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புவனேக அலுவிஹார மற்றும் எஸ் துரைராஜா முதலான நீதியர்கள் முன்னிலையில் குறித்து மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த உடன்படிக்கை நாட்டின் இறைமைக்கும் சுதத்திரத்திற்கும் பாதகமானது என மனுதாரர் தரப்பு சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டியதுடன் குறித்த மனுக்களை விசாரணைக்குட்படுத்துவதற்கு பூரண தீர்ப்பாயத்தை அமைக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த கோரிக்கையை பிரதம நீதியரருக்கு அனுப்பிவைக்குமாறு நீதியரசர்கள் குழாம் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.