மைக்ரோசொப்ட் ஜப்பான் நிறுவனமானது தனது ஊழியர்களுக்கு முழுமையான ஊதியத்துடன் வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டுமே பணியாற்ற அனுமதித்து மேற்கொண்ட பரீட்சார்த்த நடவடிக்கையின் போது நிறுவனத்தின் விற்பனை 40 சதவீதத்தால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது.

அந்த நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து தனது முழு நேர ஊழியர்களுக்கு முழுமையான ஊதியத்துடன் வாரத்தில் வெள்ளிக்கிழமையிலான விசேட விடுமுறை உள்ளடங்கலாக 3 நாட்கள் விடுமுறையை வழங்கி மேற்படி பரீட்சார்த்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
அத்துடன் ஊழியர்களுடனான கூட்டங்களுக்கான நேரம் ஆகக்கூடுதலாக 30 நிமிடங்களாக வரையறை செய்யப்பட்டதுடன் நேரடி கலந்துரையாடல்களுக்குப் பதிலாக இணையத்தளம் மூல மான கலந்துரையாடல்களை மேற் கொள்ள ஊக்குவிக்கப்பட்டது.

வாரத்தில் 3 நாட்கள் விடுமுறையை வழங்கியமை ஊழியர்கள் களைப்படைவதைக் குறைத்து அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதாக உள்ளதாக மைக்ரோசொப்ட் ஜப்பான் நிறுவனம் தெரிவிக்கிறது.
உலகில் அதிக மணித்தியால பணி நேரத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளது.