(நா.தனுஜா)

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மாநகரசபை உறுப்பினருமான உமா சந்திரா பிரகாஷ் மற்றும் தமிழ் தேசிய முற்போக்குக் கட்சியினர் தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, சஜித் பிரேமதாஸவிற்கான தமது ஆதரவு தொடர்பில் குறிப்பிட்டனர். 

அங்கு கருத்து வெளியிட்ட உமா சந்திரா பிரகாஷ் கூறியதாவது:

மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கி, புதிதாகக் கட்சியொன்றை ஆரம்பித்த போது அவருடைய தலையீடு கட்சியில் இருக்காது என்றே கருதினோம்.

அந்தவகையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தாலும் கூட, சுதந்திரக் கட்சியின் சார்பில் வேட்பாளரொருவர் களமிறக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதற்கேற்ப எமது கட்சியை விற்கமாட்டோம் என்றும், கட்சி அழிந்து போவதற்கும் இடமளிக்க மாட்டோம் என்றும் பொதுச்செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் கூறிவந்தனர். 

சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவந்த நிலையில் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களை அடுத்து எமது கட்சியுடன் எவ்வித கலந்துரையாடல்களும் இன்றி 'நானே ஜனாதிபதி வேட்பாளர்' என்று கோத்தாபய ராஜபக்ஷ அறிவித்தார். 

அதேவேளை கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதில் தலைவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நடுநிலை வகிக்கப் போவதாக ஒதுங்கிக்கொள்கிறார். அதன்பின்னர் பலரின் விருப்பம் தெரிவிக்காத போதிலும், கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட சில தரப்பினர் மேற்கொள்கின்றார்கள்.

இந்நிலையில் சுதந்திரக் கட்சி அழிந்துபோகாமல் பாதுகாப்பதற்கான ஒரேவழி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது மாத்திரமேயாகும். அதுமாத்திரமன்றி நான் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில், போரின் போதும் அதன் பின்னரும் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் நன்கு அறிந்திருக்கிறேன். 

அவ்வாறிருக்கையில் 'கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களியுங்கள்' என்று தமிழ் மக்களிடம் என்னால் பொய் கூறமுடியாது. ஆகவே சுதந்திரக் கட்சியில் இருந்துகொண்டே சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கிறேன் என்றார்.