(இராஜதுரை ஹஷன்)

புதிய  ஜனநாயக  முன்னணியின்  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு  இலங்கை தமிழரசு  கட்சி  ஆதரவு  வழங்கத்  தீர்மானித்துள்ளமை  அரசியல் ரீதியில் தவறான தீர்மானமாகும்.  கூட்டமைப்பினர் த்ஙகளின்   சுய  நலத் தேவைகளை  விடுத்து  தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு   காண்பதற்காக அரசியலில் செல்வாக்கு  செலுத்த வேண்டும் என ஸ்ரீ ரெலோ அமைப்பின்  பொதுச்செயலாளர்  உதயராசா தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இடம் பெறவுள்ள  ஜனாதிபதி தேர்தலில்    பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிப் பெறுவார் என்பதில் எவ்வித எவ்வித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது.வடக்கு   மற்றும் கிழக்கு  தமிழ் மக்கள் இம்முறை  ஜனாதிபதி தேர்தலில்  அரசியல்  ரீதியில்  சிறந்த தீர்மானத்தை மேற்கொள்வார்கள்.

புதிய  ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்  சஜித் பிரேமதாஸவிற்கு   இலங்கை தமிழரசு  கட்சி ஆதரவு  வழங்குவதாகத்  தீர்மானித்துள்ளமை   அரசியல் ரீதியில் தவறான   தீர்மானமாகும். 

தமிழ்த்  தேசியக்  கூட்டமைப்பு   தொடர்ந்து  ஐக்கிய தேசிய கட்சித் தலைமையிலான அரசாங்கத்திற்குப் பங்காளியாகச்  செயற்படுகின்றது.    தங்களின் அரசியல் தேவைகளை  விடுத்து    தமிழ் மக்களின்  அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு  காண்பதற்கு அரசியலில் இவர்கள் செல்வாக்கு செலுத்த வேண்டும்.நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு   வழங்கிய   வாக்குறுதிகள் இதுவரையில்  நிறைவேற்றப்படவில்லை.   

காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை    ஆகியவை இவற்றில் பிரதானமாகக்  காணப்படுகின்றது. இவையனைத்தும்   வெறும் வாக்குறுதிகளாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.