(நா.தனுஜா)

நாட்டில் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை அனைவரும் அறிவர்.

பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்: தாக்கப்பட்டனர்: காணாமலாக்கப்பட்டனர். அதேபோன்று ஊடகநிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்ட, தாக்கப்பட்ட சம்பவங்களையும் கடந்த காலத்தில் பார்த்திருக்கிறோம். 

தற்போது மீண்டும் அத்தகையதொரு கலாசாரத்தை கோத்தாபய ராஜபக்ஷ தரப்பு ஏற்படுத்துவதை காணமுடிகின்றது.

எதிரணியினரால் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகநிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன், அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அண்மைக்காலமாக பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாகக் கைச்சாத்திடப்படாது என நேற்று ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் கடிதம் மூலம் உறுதி வழங்கியிருக்கிறார்கள்.

எனினும் இவ்விருவரினதும் கடிதத்தின் உள்ளடக்கத்தில் காணப்படும் வேறுபாடுகள் அவதானத்திற்குரியவையாகும். 

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் கடிதத்தில், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் குறிப்பாக மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில், ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மதகுருமாருடனும், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்மானிக்கப்படும் என்று உறுதியளித்திருக்கின்றார். 

ஆனால் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ அத்தகைய உறுதியாக கருத்து எதனையும் தெரிவிக்காத அதேவேளை, அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை என்பதால் அவருடைய கருத்துக்களை முழுமையாக நம்ப முடியாத நிலையும் உள்ளது. 

அடுத்ததாக கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை நாட்டில் ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டார். பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டதுடன், அவருடைய மனைவி இன்னமும் நீதிகோரி போராடுகின்றார். மேலும் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். தாக்கப்பட்டனர். காணாமலாக்கப்பட்டனர். அதேபோன்று ஊடகநிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்ட, தாக்கப்பட்ட சம்பவங்களையும் கடந்த காலத்தில் பார்த்திருக்கிறோம். 

இந்நிலையில் தற்போது மீண்டும் அத்தகையதொரு கலாசாரத்தை கோத்தாபய ராஜபக்ஷ தரப்பு ஏற்படுத்துவதை காணமுடிகின்றது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நடத்தப்பட்ட அனைத்து கருத்துக்கணிப்புக்களிலும் எமது வேட்பாளர் சஜித் பிரேமதாஸவே முன்நிலை வகிக்கின்றார்.

எனவே தமது தோல்வியை அறிந்துகொண்ட எதிரணியினர் தற்போது ஊடகங்களை அச்சுறுத்தவும், அவற்றுக்கு அழுத்தம் வழங்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். இவற்றிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் கடந்த காலத்திலிருந்து எவ்வித பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையும், அவர்கள் சிறிதும் மாறவில்லை என்பதையும் உணரமுடிகிறது என அவர் தெரிவித்தார்.