(நா.தனுஜா)

நல்­லாட்சி அர­சாங்கம் நீதித்­து­றையின் சுயா­தீ­னத்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற போதிலும் கூட ஒரு கொலை வழக்கை விசா­ரணை செய்து நிறை­வு­செய்­வ­தற்கு 10–-15 வரு­டங்கள் தேவைப்­ப­டு­கின்­றது. நீதி­மன்ற செயற்­பா­டு­களில் துரி­தத்­தன்மை இல்லை. எனவே சஜித் பிரே­ம­தா­சவின் புதிய அர­சாங்­கத்தில் எந்­த­வொரு வழக்­கையும் 5 வரு­ட­கா­லத்­துக்குள் நடத்தி முடிக்­கக்­கூ­டிய வித­மாக நீதி­மன்றக் கட்­ட­மைப்பு ஒப்­பீட்­ட­ளவில் குறைந்த செலவில் முழு­வ­து­மாக டிஜிட்டல் மயப்­ப­டுத்­தப்­படும் என்று டிஜிட்டல் உட்­கட்­ட­மைப்பு மற்றும் தகவல் தொழில்­நுட்ப அமைச்­ச­ரவை அந்­தஸ்­தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா உறு­தி­ய­ளித்தார்.

'சஜித்தின் சமு­தா­யப்­பு­ரட்சி' என்ற தலைப்பில் கொழும்­பி­லுள்ள இலங்கை மன்­றக்­கல்­லூ­ரியில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:

இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யி­ருக்கும் அனைத்து வேட்­பா­ளர்­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­க­ளிலும் சஜித் பிரே­ம­தா­சவின் விஞ்­ஞா­னமே மிகவும் சிறந்­த­தாகும். ஏனெனில் அவ­ரு­டைய விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள கொள்­கை­களில் சமு­தா­யத்தின் அனைத்துப் பிரி­வினர் தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

 சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­ய­டைந்து, புதிய ஆட்சி அமைக்­கப்­பட்ட பின்னர் பாரிய அர­சியல் மறு­சீ­ர­மைப்­பொன்று ஏற்­ப­டுத்­தப்­படும். அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்­தத்தின் ஊடாக ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும் இன்­னமும் பலம்­வாய்ந்த நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறையே நடை­மு­றையில் இருக்­கின்­றது. தற்­போதும் ஜனா­தி­ப­தியே நாட்டின் தலை­வ­ரா­கவும் அமைச்­ச­ர­வையின் தலை­வ­ரா­கவும் முப்­ப­டை­களின் பிர­தா­னி­யா­கவும் விளங்­கு­கின்றார்.

இந்­நி­லையில் நாம் ஆட்­சி­ய­மைக்கும் போது ஜனா­தி­பதி அவ­ருக்கு அடுத்த நிலை­யி­லுள்ள அதி­கா­ரி­களைக் கண்­கா­ணிக்­கத்­தக்க முறை­யொன்று உரு­வாக்­கப்­படும். அவை­ய­னைத்தும் நவீன டிஜிட்டல் தொழில்­நுட்­பத்தைப் பயன்­ப­டுத்தி ஒழுங்­கு­ப­டுத்­தப்­படும்.

அதே­போன்று அரச சேவை­க­ளுக்­காக மேற்­கொள்­ளப்­படும் கொடுப்­ப­ன­வு­க­ளுக்­கான ஒரு இலத்­தி­ர­னியல் முறையில் அமைந்த கொடுப்­ப­னவு அட்டை முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். அத­னூ­டாக குறித்த சேவை­யுடன் தொடர்­பு­டைய அனைத்­தையும் மேற்­கொள்ள முடியும். அடுத்­த­தாக நாம் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்­சிக்கு வந்­த­போது நீதித்­து­றையின் சுயா­தீ­னத்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­தினோம். எனினும் தற்­போதும் ஒரு கொலை வழக்கை விசா­ரணை செய்து நிறை­வு­செய்­வ­தற்கு 10–-15 வரு­டங்கள் தேவைப்­ப­டு­கின்­றன. நீதி­மன்ற செயற்­பா­டு­களில் துரி­தத்­தன்மை இல்லை.

எனவே எந்­த­வொரு வழக்­கையும் 5 வரு­ட­கா­லத்­துக்குள் நடத்தி முடிக்­கக்­கூ­டிய வித­மாக நீதி­மன்றக் கட்­ட­மைப்பை ஒப்­பீட்­ட­ளவில் குறைந்த செலவில் முழு­வ­து­மாக டிஜிட்டல் மயப்­ப­டுத்­து­வ­தற்குத் திட்டமிட்டிருக்கின்றோம் என்றார்.