ஓமந்தை மாளிகை கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலய காணியை துப்புரவு செய்யும் போது அதில் இருக்கக்கூடிய புரதான சின்னங்களை சேதப்படுத்தியதாக தெரிவித்து தொல்லியல் திணைக்களத்தினால் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து கடந்த வாரம் ஆலய நிர்வாகத்தினர் இருவர் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

வவுனியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாளிகை கிராம மக்கள் தங்களுடைய கிராமத்தில் இருக்கின்ற மாளிகை காட்டு விநாயகர் என்ற மிக பழமைவாய்ந்த விநாயகர் ஆலயத்தினுடைய காணிகளை துப்பரவு செய்தபோது புரதான சின்னங்கள் சேதப்படுத்தப்படதாக தெரிவித்து, வவுனியாவில் இருக்கின்ற தொல்பொருள் திணைக்களம் ஆலயத்தின் நிர்வாகத்திற்கு எதிராக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு ஆலயத்தினுடைய தலைவர் சுப்பிரமணியம் செயலாளர் அகிலன் ஆகிய இருவரும் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்றையதினம் குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இருவருக்கும் பிணை கிடைக்காமையினால் மீண்டும் எதிர்வரும் 16ம் திகதிக்கு வழக்கு திகதியிடப்பட்டிருப்பதனால் குறித்த இருவரும் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாலயம் துப்பரவு செய்யும் போது நிலத்திற்கு  அடியிலேயே செங்கற்கள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றதென கூறியே தொல்பொருள் திணைக்களம் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 

கிராம மக்கள் தெரிவிக்கையில்,

இந்த ஆலயம் தொல்லியல் திணைக்களத்திற்கு கீழ் இருக்கின்றது என்பதும் எங்களுக்கு தெரியாது. அவ்விடத்தில் அதற்குரிய தொல்லியற் திணைக்களம் தனக்குரிய பெயர் பலகையை அவ்விடத்தில் போடப்படவில்லை.

அந்த வகையில் தங்களுடைய ஆலயத்தைப் புனரமைக்க சென்ற வேளையில் அவ் ஆலயத்தில் உடைய நிர்வாகத்தினரை தடுத்து வைத்திருப்பது என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும், இந்துக்களையும் தொடர்ச்சியாக இந்த தொல்லியல் திணைக்களம் இவ்வாறான தொந்தரவுகளை செய்து கொண்டிருக்கின்றதாக கிராம மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்களை பார்வையிட்டு அவர்களின் நிலைமைகளை கேட்டறிந்து கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடந்தவாரம்  வவுனியா சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.