அறிமுக இயக்குனர் பாரி கே. விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி, முனீஸ்காந்த் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஆலம்பனா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயாரித்த பட தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கொட்டப்பாடி ராஜேஷ்,  தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிக்கும்,‘ஹீரோ’ என்ற படத்தையும், மக்கள் செல்வன் விஜயசேதுபதி நடிக்கும் ‘க / பெ ரணசிங்கம்’ என்ற இரண்டு படங்களை தயாரித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இந்நிறுவனம் சார்பில் இவர் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘ஆலம்பனா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதனை அறிமுக இயக்குனர் பாரி கே .விஜய் இயக்குகிறார். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்தப்படத்தில் நடிகர்கள் வைபவ், முனிஸ்காந்த், காளி வெங்கட், ஆனந்தராஜ், முரளி சர்மா, கபீர் துகான் சிங், திண்டுக்கல் லியோனி ஆகியோருடன் நடிகை பார்வதியும் நடிக்கிறார்.

படத்தைப்பற்றி அறிமுக இயக்குனர் தெரிவிக்கையில்,“

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அற்புதவிளக்கை வைத்து அலாவுதீன் செய்யும் சாகசங்கள் பிடிக்கும். அதே போல் அற்புத விளக்கிலிருந்து வெளியாகும் ஜீனி என்ற கற்பனை கதாப்பாத்திரத்தின் உதவியுடன் நாயகன் வைபவ் செய்யும் சாகசங்கள் தான் இந்த ‘ஆலம்பனா’. ஜீனியாக முனீஸ்காந்த் நடிக்கவிருக்கிறார்.

நாயகன் வைபவ் பக்கத்துவீட்டு இளைஞன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, அவளை காதலிக்கும் பெண்ணாக நடிகை பார்வதி நடித்திருக்கிறார். இப்படத்தில் கிறாபிக்ஸ் காட்சிகள் ஏராளமாக இருக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெறுகிறது. பேய் படங்கள் ஒரு சீஸன் என்றால் சாகசங்களும், கற்பனைக்கு எட்டாத சம்பவங்களும் திரையில் தோன்றுவதை ரசிக்கும் காலம் இந்த சீஸன் என்பதால் ஆலம்பனாவை அனைத்து தரப்பு ரசிகர்களுக்காகவும் உருவாக்கவிருக்கிறோம்.” என்றார்.