எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­த­லா­னது பணத்­திற்கும் மக்­களின் உணர்­வுக்கும் இடை­யி­லான போட்­டி­யாக அமையப் போகின்­றது. இந்த தேர்­தலில் இறு­தி­யாக மக்­களின் உணர்வே வெற்­றி­பெறும் என ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் தேசிய அமைப்புச் செய­லாளர் ஜனகன் விநா­ய­க­மூர்த்தி தெரி­வித்தார்.

வீர­கே­சரிக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

செவ்வியின் முழு விபரம் வருமாறு:

கேள்வி: தமிழ்  மக்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் கட்­சியின் உறுப்­பினர் என்ற வகையில் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பான உங்­க­ளு­டைய அபி­ப்பி­ராயம் என்ன?

பதில்: இவ்­வ­ருட ஜனா­தி­பதி தேர்­த­லா­னது 2015 ஆம் ஆண்டு தேர்­தலை போன்றே மிக முக்­கி­யத்­துவம் பெற்­றுள்­ளது. அதா­வது மக்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட வேட்­பா­ள­ருக்கும் கட்சித் தலைவர் ஒருவர் விரும்­பு­கின்ற வேட்­பா­ள­ருக்­கு­மான போட்­டி­யா­கவே இந்த ஜனா­தி­பதி தேர்தல் அமையப்போகின்­றது. 

இத­ன­டிப்­ப­டை­யி­லேயே நாம் மக்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான சஜித் பிரே­ம­­தா­ஸ­விற்கு எமது கட்­சியின் தலைவர் மனோ கணேசன் தலை­மையில் ஆத­ரவை வழங்க தீர்­மா­னித்­துள்ளோம். சஜித் பிரே­ம­தா­ஸவின் வெற்­றியின் மூலம் நாம் கடந்த நான்கு வரு­டங்­களில் அனு­ப­வித்த சுதந்­தி­ரத்தை மீண்டும் அனு­ப­விக்க முடியும்.

கேள்வி: சஜித் பிரே­ம­தாஸ மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட வேட்­பாளர் என குறிப்­பி­டு­கின்­றீர்கள். அவ்­வா­றாயின் கோத்­தாபய ய ராஜ­ப­க்ஷ­வுக்கு மக்கள் ஆத­ரவு இல்­லையா?

பதில்: கோத்­தாபய­ ராஜ­பக்ஷ என்­பவர் ஒரு கட்சி சார்ந்த நபரே தவிர அவர் ஒரு அர­சியல்வாதி­யல்ல. ஆனால் சஜித் பிரே­ம­தாஸ பாரம்­ப­ரி­ய­மான ஒரு அர­சி­யல்­வா­தி­யாவார். அர­சியல் தலை­வரின் மக­னாக இருக்­கின்றார். அர­சியல் கட்­சியின் பிரதி தலை­வ­ராக இருக்­கின்றார். அந்த அடிப்­ப­டையில் ஒரு ஜன­நா­யக அடிப்­ப­டையில் மக்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட நப­ராக சஜித் காணப்­ப­டு­கின்றார். ஆனால்  கோத்­தாபய  ராஜ­­பக்ஷ இரா­ணு­வத்தில் இருந்து வெளியே­றிய நப­ராவார். நிர்­வ­கிக்கும் தன்மை கொண்­டவர். இத­ன­டிப்­ப­டையில் அவ­ருக்கு எந்­த­ளவும் அர­சியல் ஞானம் இருக்­கின்­றது. இதனால் அவர் மக்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டாரோ அல்­லது இல்­லையா என்று தெரி­ய­வில்லை.

கேள்வி: பிர­தான இரு வேட்­பா­ளர்­களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதி­க­மாக உள்­ளது?

பதில்: யுத்தம் கார­ண­மாக தமிழ் மக்­களால் ஒதுக்­கப்­பட்ட நபர் ஒரு­வரே கோத்­தாபய ராஜ­­பக்ஷ. தமிழ், முஸ்லிம் மக்­களின் முழு­மை­யான ஆத­ரவை பெற்ற நப­ராக சஜித் காணப்­ப­டு­கின்றார். சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களே ஜனா­தி­பதி தேர்­தலை தீர்­மா­னிக்­கின்­றன. எனவே எமது வேட்­பா­ள­ருக்கே அதிக வெற்றி வாய்ப்புள்­ளது. எனவே அரச பயங்­க­ர­வா­தத்தில் உச்­ச­மாக இருந்­த­வரும் தமி­ழர்கள் பலரின் மர­ணத்­துக்கு பொறுப்பு கூற வேண்­டி­யவ­ரு­மான கோத்­தாபய ராஜ­­பக்ஷ இந்த தேர்­தலில் வெற்­றி­பெறு­வது என்­பது கடி­ன­மான ஒன்­றாகும்.

கேள்வி: சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களே ஜனா­தி­பதி தேர்­தலை தீர்­மா­னிக்க போகின்­றது என்று கூறு­கின்­றீர்கள். ஆனால் சிறு­பான்மை வாக்­கு­களை சித­ற­டிப்­ப­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அதே­வேளை இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலை பெரும்­பான்­மை­யின வாக்­கு­களே தீர்­மா­னிக்க போகின்­றது என ஒரு தரப்பு கூறி வரு­கின்­றதே?

பதில்: நிறை­குடம் ஒரு­போதும் தளம்­பாது. நாம் நிறை­கு­ட­மாகவே இருக்­கின்றோம். கோத்­தாபயவின் தரப்பே தற்­போது தளம்பல் நிலையில் உள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாஸ ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வதால் 20 வரு­ட­கா­ல­மாக உறங்­கிக்­கொண்­டி­ருந்த அடி­மட்ட ஆத­ர­வா­ளர்கள் கூட தற்­போது விழித்­துக்­கொண்­டுள்­ளார்கள்.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு பாரம்­ப­ரி­யமாக காணப்­ப­டு­கின்ற வாக்கு வங்கி தற்­போது அதி­கரித்­துள்­ளது. நகர்­ப்பு­றங்­களை பொறுத்­த­வ­ரை­யி­லேயே இவ்­வா­றான கட்­டுக்­க­தைகள் உலா­வ­ரு­கின்­றன. ஆனால் பின்­தங்­கிய பகு­தியில் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கே அதி­க­மான ஆத­ரவு காணப்­ப­டு­கின்­றது.

உண்­மையில் சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­களை சித­ற­டிப்­ப­தற்­கான வேலைத்­திட்­டங்கள் நடை­பெ­று­கின்­றன. ஆனால் இந்த தேர்­த­லா­னது உணர்­வுக்கும் பணத்­திற்கும் இடை­யி­லான போட்­டி­யாக உள்­ளது. இறு­தியில் மக்­களின் உணர்வே வெல்லும். பணத்­துக்கு அடி­ப­ணிந்து தம்மை அழித்­த­வ­ருக்கு நாட்டில் வாழும் முஸ்­லிம்­களோ தமி­ழர்­களோ ஒரு­போதும் ஆத­ரவு வழங்­க­மாட்­டார்கள். அவர்­களின் உணர்­வு­களே தேர்­தலின் வெற்­றியை நிர்­ண­யிக்கும்.

கேள்வி: ஒரு­வேளை சஜித் பிரே­ம­தாஸ வெற்­றி ­பெற்றால்  சிறு­பான்­மை­யி­னரின் உணர்­வுக்கு மதிப்­ப­ளிக்­கப்­படும் என்­கின்­றீர்கள்...?

பதில்: நிச்­ச­ய­மாக சஜித் பிரே­ம­தாஸ சிறு­பான்­மை­யின மக்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிப்பார். காரணம் நாமே தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக இருக்­கின்றோம்.

கேள்வி: வடக்கு, கிழக்கு பல்­க­லைக்­கழக மாண­வர்­களும் தேசிய தமிழ் அர­சியல் கட்­சி­களும் இணைந்து முன்­வைத்­துள்ள 13 அம்ச கோரிக்­கை­களை கோத்­தாபய ராஜ­பக்ஷ வெளிப்­ப­டை­யாக ஏற்க மறுத்­து­விட்டார். சஜித் பிரே­ம­தா­ஸவும் மறுத்­து­விட்டால். இந்த 13 அம்ச கோரிக்­கை­களில் மக்­களின் உணர்­வுகள் உள்­ள­டங்­கி­யுள்­ளன. இதனை ஏற்­றுக்­கொள்­ளாத வேட்­பா­ளர்கள் எவ்­வாறு சிறு­பான்மை மக்­களின் உணர்­வு­களை மதிப்­பார்கள் என உறு­தி­யாக கூறு­கின்­றீர்கள்?

பதில் : சிறு­பான்­மை­யாக இருக்­கின்ற நாம் எந்­த­வொரு விட­யத்­தையும் அதி­க­மா­கவே கேட்போம். அப்­போது தான் சிறி­த­ள­வா­வது கிடைக்கும். 13 அம்ச கோரிக்­கைகள் எம்மை பொறுத்­த­வ­ரையில் முக்­கி­ய­மா­ன­வை­யாகும். எமது கோரிக்­கைகள் இந்த நாட்டில் அர­சி­ய­ல­மைப்­புக்கு புறம்­பா­ன­தாக இருக்­கலாம். ஆனால் அது குறித்து எமக்கு கவ­லை­யில்லை. எமது விருப்பம் தேவை­களை அதி­க­மாக முன்­வைக்க வேண்டும். எமது எண்­ணப்­பாட்டை தெளிவாக கூறி­வ­ரு­கின்றோம். அதற்­கா­கவே நாம் அர­சியல் களத்தில் இருந்து போராடி வரு­கின்றோம். எமது கோரிக்­கை­களை செவி சாய்த்து கேட்கக் கூடி­ய­வர்கள் யார் என்று பார்த்தால் சஜித் பிரே­ம­தாஸ என்­பது யதார்த்­த­மான உண்­மை­யாகும்.

கேள்வி: நல்­லாட்சி அர­சாங்­கத்தால் மலையக மக்­க­ளுக்கு 50 ரூபா சம்­ப­ளத்தை பெற்­றுக்­கொ­டுக்க முடி­ய­வில்லை. இப்­போது 1500 ரூபா பெற்­றுக்­கொ­டுக்க போவ­தாக உங்­களின் வேட்­பாளர் கூறு­கின்­றாரே..?

பதில் : தமிழர் முற்­போக்கு கூட்­டணி இந்த இடத்தில் சந்­தோ­ச­ம­டை­கின்­றது. 1500 ரூபாவை வழங்க முடியும் என ஒரு தலைவர் வெளிப்­ப­டை­யாக கூறி­விட்டார். இந்த செய்தி மக்கள் மத்­தியில் சென்று விட்­டது. இதையே நாம் எதிர்­பார்த்தோம். இது எமது முத­லா­வது வெற்­றி­யாகும். இந்த நேரத்தில் மலை­யக கட்­சிகள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து அர­சியல் அழுத்­தத்தை கொடுக்க வேண்டும். அப்­போதே நாம் வெற்­றி­பெற முடியும்.

கேள்வி:  சஜித்­துக்கு ஆத­ரவு வழங்க  ஜன­ நாயக மக்கள் முன்­ன­ணியின் நிபந்­த­னைகள் என்­ன­வாக இருக்­கின்­றது?

பதில் : எமது கட்­சியின் தலைவர் மனோ கணே­சனின் முதல் நிபந்­த­னையே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­ஸவை கள­மி­றக்க வேண்டும் என்­ப­தாகும். அதில் நாம் வெற்­றி­பெற்றோம். எமது நிபந்­த­னை­களை விட எமது கோரிக்­கை­க­ளுக்கு செவி­சாய்க்கும் தலை­வரை கொண்டு வர­வேண்டும் என்ற கடப்­பாடு எம்­மிடம் இருந்­தது. அமைச்சர் மனோ கணே­சனின் பங்­க­ளிப்பில் முதலில் அர­சாங்­கத்தை அமைப்­பதே நோக்­க­மாக இருந்தது. இதன் மூலம் எமது பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். இதேவேளை அடுத்த கட்ட கோரிக்கைகளை சரியான சந்தர்ப்பத்தில் அரசியல் களத்தில் முன்வைப்போம்.

கேள்வி: ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னாலும்  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னாலும் சரி, தமிழர் விவ­கா­ரத்தில் சூழ்­ச்சி­யான அர­சி­ய­லையே முன்­னெ­டுத்­துள்­ளமை வர­லாற்று ரீதி­யாக புலப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான பின்­ன­ணியில் எதிர்­வரும் தேர்தல் மக்கள் எவ்­வாறு அணுக வேண்டும்?

பதில்: இந்த குற்­றச்­சாட்டை நாமும் ஏற்­றுக்­கொள்­கின்றோம். இரு பிர­தான கட்­சிகளும் தமி­ழர்­களை பயன்­ப­டுத்­து­கின்­றன. அவர்­களின் எண்­ணப்­பா­டு­களை நிவர்த்தி செய்­வ­தற்­கான களத்­தினை அமைத்து கொடுப்­ப­தில்லை. இந்த குற்­றச்­சாட்­டுக்­களை ஏற்­றுக்­கொண்­டாலும் கூட, நாம் தேர்ந்­தெ­டுக்கப் போவது சர்­வ­தி­கார தலை­வ­ரையா அல்லது ஜனநாயக தலைவரையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

நேர்காணல் - எம்.டி.லூசியஸ்