முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினுடைய மகன் நாமல் ராஜபக்ச அடிக்கடி வருகைதந்து செல்வதாக அறிகின்றேன். அவர்களின் இத்தயை உலாத்தல் என்பது சாமானியமான விடயமல்ல, சத்தமில்லாமல் காணி அபகரிப்புப் போன்ற விடயங்களில் அவர்கள் ஈடுபடுவார்கள்.

எனவே மக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்கவேண்டுமென முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவுப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - முள்ளியவளை, விநாயகர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் எமது ஜனாதிபதியுடன், சற்று முரண்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு விடயமாக எமது அரசியல் இருந்தலும், ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக இணைந்து இயன்றவரை காணிவிடுவிப்பு முயற்சியில் ஒரு தாராளத் தன்மையுடன் இயன்றவரை விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டிருக்கின்றனர்.

அவ்வாறான தாராளத் தன்மையினால்தான் கேப்பாப்புலவுப் பிரச்சினை இந்த அளவிற்காவது குறைந்திருக்கின்றது. முன்னைய ஆட்சியாளர்களின் காலம் என்றால் ஒரு அங்குல நிலத்தினையும் விடுவிப்பதில் எந்த சாத்தியமும் இருந்திருக்க மாட்டாது.

கடந்த ஆட்சியாளர்களது அணுகுமுறை எவ்வாறு இருக்குமெனஅனைவருக்கும் தெரியும்.எதிர்த்துப் போட்டியிடுகின்ற வேட்பாளர் இங்கே வரப்போகின்றார் என்று அறிகின்றேன். முன்னாள் ஜனாதிபதியினுடைய செல்வப் புத்திரன், இங்கே இந்த முல்லைத்தீவு மாவட்டத்தையே தத்தெடுத்திருக்கின்றார் போலும். அடிக்கடி இங்கு வருகைதந்து செல்வதாக அறிகின்றேன்.

கவனம், மிகவும் கவனம், உங்களுக்கே தெரியாமல், வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பதுபோன்றுதான் அவர்களுடைய செயற்பாடுகள் இடம்பெறும். படிப்படியான குடியேற்றங்கள் இங்கு நடைபெறும். காணி அபகரிப்புக்கள் உங்களுக்குத் தெரியாமலே அரங்கேறும்.

ஆனால் தாராளமாக கோவிலுக்கு வருவார்கள், விபூதியைப் பூசிக்கொள்வார்கள், போடப்படுகின்ற மாலைகளையும் அணிந்துகொள்வார்கள் இவ்வாறாக எல்லாவற்றையும் செய்வார்கள்.

ஏதோ உங்களுக்கு நன்மை செய்வது போன்று வந்து, இங்கு 'உலாத்துகின்ற உலாத்தல்' சாமானியமான விடயமல்ல இதிலே நாங்கள் அனைவரும் கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்றார்.