ஏப்ரல் குண்டுத் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திய பாராளுமன்ற தெரிவுக்குழு அங்கத்துவத்தை புறக்கணித்துவிட்டு, இப்போது புதியதொரு குழுவை நியமிக்கின்றனர். எங்களது அறிக்கையில் உண்மைக்குப் புறம்பான ஏதேனும் விடயங்கள் இருக்கின்றதா என்று முதலில் பாருங்கள். எல்லாவற்றிலும் அரசியல் இலாபம் நாடுவது எதிர்க்கட்சிக்கு பழக்கப்பட்டுவிட்டது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தது இன்று திகன பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

ஏப்ரல் குண்டுத் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பார்த்ததும் மற்றும் கேட்டதுமான சாட்சியங்களை பதிவுசெய்து பரிந்துரைகளை சரியாக பெற்றுக் கொடுத்தோம். புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்ட தகவல்கள் தேவையான நேரத்தில் முன்வைக்கப்படவில்லை எனில், அதன் கைசேதங்களுக்கு யார் பொறுப்புக்கூறவேண்டும் என்பதை தெளிவாக பரிந்துரை செய்துள்ளோம்.

அரச தலைவர்களும் தங்கள் கடமைகளிலிருந்து ஓரளவுக்கு தவறியிருந்தாலும் அதுபற்றியும் தெரிவுக்குழு அறிக்கையில் குறிப்பிட்டோம். பொறுப்புடன் நடந்துகொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் நாட்டின் பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றிணைவது வழக்கம். ஆனால், எதிர்க்கட்சிலுள்ள மொட்டு அணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தெரிவுக்குழு அங்கத்துவத்தை பகிஷ்கரிப்புச் செய்தன. 

நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், கட்சிபேதம் பாராமல் அனைவரும் ஒன்றிணைவது தேசிய மட்டத்தில் சாதாரணமாக நடக்கின்ற நிகழ்வாகும். ஆனால், எமது நாட்டில் அவ்வாறு நடைபெறவில்லை. எல்லாவற்றிலும் அரசியல் செய்கின்றனர். எதிரிகள் மீது எப்படி குற்றம் சுமத்தாலாம் என்று மாத்திரமே பார்க்கின்றனர். அரசாங்கத்தின் மீது எல்லாவற்றையும் சுமத்திவிட்டு தப்பிக்கவே பார்க்கின்றனர்.

நாம் உண்மையை கண்டறிவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்தபோது சுதந்திரமாக எமக்கு வேண்டிய எந்த கேள்வியையும் கேட்கமுடியும். அதற்குத்தான் தெரிவுக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் எல்லாக் கட்சிகளுக்கும் தெரிவுக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சியினர் அதனை நிராகரித்து குறுகிய அரசியல் இலாபம் பெற்றுக்கொண்டனர். இப்போது புதிதாக இன்னொரு குழுவை நியமிக்கின்றனர். 

எங்களது பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையை என்னவென்று முதலில் பாருங்கள். நாம் முன்வைத்த சாட்சியங்களுக்கு புறம்பாக, ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சி என்றாலும் சரி, எதிர்க்கட்சி என்றாலும் சரி, முதலில் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். எல்லாவற்றிலும் கீழ்த்தரமான அரசியல் இலாபத்தை நாடுவது எதிர்க்கட்சிக்கு பழக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.